இன்றைய பணிநீக்க சூழலில்.. ஐடி துறையில் ஒரு வேலை கிடைத்துவிடாதா? என்று ஏங்கும் இளைஞர்கள் பலர். அதிலும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற முன்னணி தொழில்நுட்பத்தில் பணிபுரியும் ஒரு வேலை கிடைத்தால் லைஃப் செட்டில் என்று எண்ணும் நபர்களுக்கு மத்தியில், அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு இன்று சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார் 28 வயது இளைஞர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கார்ப்பரேட் வேலையில் அவருக்கு கை நிறைய சம்பளம் கிடைத்தது. ஆனால் விவசாயத்தின் மூலம் அதைவிட அதிக சம்பளம் பார்த்து வருகிறார். அவர் அப்படி என்ன செய்கிறார்?, எப்படி இவ்வளவு வருமானம் கிடைக்கிறது? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மும்பையில் உள்ள பிரபல பிடபிள்யுசி நிறுவனத்தில் பணிபுரிந்தார் 28 வயதான புஷ்பக் சாஹு. இவருக்கோ கார்ப்பரேட் வேலையைச் செய்வதில் அவ்வளவாக விருப்பமில்லை. இதனால் சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கே திரும்பி ஆர்கிட் மலர்களை வளர்க்க முடிவு செய்தார். இவருடைய இந்த முடிவை கேட்ட உறவினர்களோ படித்த படிப்புக்கு ஏற்ற வேலையா இது? ஏன் இப்படி செய்கிறாய் என்று அவரை திட்டி தீர்த்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் கேட்காமல் தனது விருப்பத்தின் பேரில் ஆர்கிட் மலர்களை வளர்த்து இன்று அதிக வருமானம் ஈட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

கொரோனா காலத்தில் தொடங்கிய காதல்: ஐடி துறை வேலை புஷ்பக் சாஹுவிற்கு அந்த அளவுக்கு பிடிக்கவில்லை. அதற்கு ஏதுவாய் கொரோனா பேரிடர் காலம் அவருடைய வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. லாக் டவுன் போட்ட போது வீட்டில் இருந்தே வேலை பார்த்துள்ளார். அப்போதும் பொழுதுபோக்கிற்காக கார்டனிங் செய்வதை வழக்கமாக மாற்றியுள்ளார். அப்போதுதான் ஆர்கிட் மலர்கள் மீது அவருக்கு தீராத காதல் ஏற்பட்டுள்ளது.
நம்மூரில் வளர்க்கப்படும் ரோஜா செடி, மல்லிகை செடி மற்றும் சாமந்திப் பூ செடி போல இந்த ஆர்க்கிட் மலர்களை சாதாரண மண்ணில் எல்லாம் வளர்க்க முடியாது. இவை எபிஃபைட்டு எனப்படும் ஒட்டுண்ணி தாவரம். இதை வளர்ப்பதற்கு ஈரப்பதமும், சத்துக்களும் போதும். அவற்றை பயன்படுத்தியே ஆர்கிட் மலர்கள் அழகாக வளரும். இந்த மலர்களின் அழகும் அதன் பின்னணியில் இருக்கும் அறிவியலுமே புஷ்பக் சாகுவை வெகுவாக கவர்ந்தது. ஒரு காலத்தில் பொழுது போக்கிற்க்காக ஆர்க்கிட் மலர்களை வளர்க்கத் தொடங்கினார். பின்னர் மெல்ல மெல்ல அதை முழு நேர வணிகமாக மாற்றினார்.
ஐடி டூ விவசாயம்: கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு கோடிங் எழுதி வேலை பார்ப்பதற்கும் வயலுக்கு சென்ற விவசாயம் செய்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. ஆரம்பத்தில் இதனால் புஷ்பக் சாகுவிற்கு பல சவால்கள் இருந்தது. ஆர்க்கிட் மலர்களை வளர்ப்பது என்பது அந்த அளவுக்கு சாதாரண விஷயம் கிடையாது. சரியான ஈரப்பதம் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சரியான வெளிச்சமும் கிடைக்க வேண்டும்.
இதற்காக சரியான உள்கட்டமைப்பை உருவாக்கினால் தான் அந்தச் செடிகள் சரியாக வளரும். ஆரம்பத்தில் இந்த உள்கட்டமைப்பை உருவாக்கவும், செடிகளை பற்றி புரிந்து கொள்ளவும் அவருக்கு நிறைய நேரம் மற்றும் முதலீடு தேவைப்பட்டது. அப்போதெல்லாம் சாகுவிற்கு நாம் சரியான முடிவு தான் எடுத்திருக்கிறோமா? என்று சிந்தனை தோன்றி மறைந்துள்ளது. ஆனால் அப்போதும் அவருடைய முயற்சியை மட்டும் அவர் கைவிடவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து தனக்கு வந்த அனைத்து சவால்களையும் சமாளித்தார்.
இப்படியே நாட்கள் கடந்தது. நாட்கள் செல்ல செல்ல புஷ்பக் சாகுவின் ஆர்கிட் மலர் பண்ணை ஒரு லாபகரமான நிறுவனமாக மாறியது. தங்கள் வீட்டை அழகாக மாற்ற நினைக்கும் வீட்டு உரிமையாளர்கள் இவருடைய இல்லத்திற்கே வந்து ஆர்கிட் செடிகளை வாங்கி செல்கின்றனர். சமீப காலமாக அயல்நாட்டு தாவரங்களின் மீது மக்களுக்கு பிரியம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதையே தனது பிசினஸுக்கு ஏதுவாக மாற்றி இருக்கிறார் புஷ்பக் சாகு.
இந்த பண்ணையின் மூலம் தற்போது ஒவ்வொரு வாரமும் சுமார் 1000 செடிகளை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார். சத்தீஸ்கர் மட்டுமின்றி கொல்கத்தா, புவனேஸ்வர் கட்டாக், நாக்பூர் மற்றும் ராய்ப்பூர் என பல நகரங்களில் இருக்கும் சந்தைகளுக்கும் விநியோகம் செய்து வருகிறார். இந்த தொழிலின் மூலம் தற்போது ஒவ்வொரு வாரமும் ரூ.30,000 வருமானம் ஈட்டி சாதித்து காண்பித்துள்ளார். உண்மையிலேயே ஒரு தொழிலை விரும்பி செய்தால் நினைக்கும் விஷயத்தை செய்து காட்ட முடியும் என்பதற்கு புஷ்பக் ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தையே கையில் எடுக்காமல்.. புதுமையான ஐடியாவின் மூலம் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று இந்த இளைஞர் நிரூபித்து காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications