வாஷிங்டன், அமெரிக்கா: உலக அளவில் ஏஐ நுட்பங்களின் வளர்ச்சி நொடிக்கு நொடி நம்மை பிரம்மிக்க வைக்கிறது. ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் முன்னிலையில் இருக்கும் சாட் ஜிபிடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஏஐ தொழில்நுட்பங்கள் குறித்து நாள்தோறும் புதிய புதிய அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அண்மையின் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சாம் ஆல்ட்மேன் ஏஐ தொழில்நுட்பம் நம்முடைய பாரம்பரிய கல்வி முறைகளையே மாற்றியமைக்க போகிறது எனக் கூறியிருக்கிறார். கல்வி நடைமுறைகள் இனிவரும் காலங்களில் பெரிய மாற்றம் காணப்போகிறது என தெரிவித்திருக்கும் சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையின் அன்றாட அங்கமாக இருக்கக்கூடிய நிலையில் நம்முடைய கல்வி கற்றலிலும் அது மிகப்பெரிய பங்காற்றப் போகிறது என தெரிவித்திருக்கிறார்.

அடுத்த 18 ஆண்டுகளில் கல்லூரி படிப்பு படிக்க வேண்டிய தேவை கூட இல்லாமல் போய்விடலாம் என கூறியிருக்கும் அவர் ஏஐ தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை பார்க்கும்போது என்னுடைய மகன் கல்லூரியில் படிக்க வேண்டிய அவசியமே இருக்காது என்று தான் தோன்றுகிறது என தெரிவித்திருக்கிறார். இன்னும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அளவில் கல்வி என்பதே மிகப்பெரிய மாற்றமடைந்திருக்கும் அது நமக்கெல்லாம் பெரிய வித்தியாசமாக தோன்றும் என குறிப்பிடுகிறார்.
தற்போது இருக்கக்கூடிய குழந்தைகளை பொருத்தவரை அவர்கள் ஏஐ தொழில்நுட்பத்துடனே வளர்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது ஆனால் அவர்களுடைய பெற்றோருக்கு தான் இது பிரச்சினையாக இருக்கப்போகிறது என தெரிவித்திருக்கிறார் .இந்த உலகத்தின் வரலாற்றை நாம் பார்க்கும் போது ஒரு புதிய தொழில்நுட்பம் வருகிறது என்றால் அந்த தொழில்நுட்பத்துடனே வளரக்கூடிய தலைமுறை அதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக மாறும் அதற்கு முந்தைய தலைமுறைகளை பொருத்தவரை அந்த தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதும் பயன்படுத்துவதும் சற்றே சவாலானதாக இருக்கும் என தெரிவிக்கிறார்.
நம்முடைய கல்வி முறையிலும் பாடங்களையும் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் கூறும் அவர் மனிதர்களுக்கே இருக்க கூடிய தனிப்பட்ட திறன்கள் புதிய விஷயங்களை கண்டுபிடிப்பது, பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய திறன், உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுவது , அனைத்து தகவல்களையும் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் முடிவெடுப்பது போன்றவற்றில் திறன்களை வளர்க்கக்கூடிய வகையில் பாடங்களை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
இனி வரக்கூடிய படிப்புகள் அனைத்தும் ஏஐ அமைப்புகளோடு இணைந்து எப்படி வேலை செய்வது என்பதை கற்றுத் தரக்கூடியவையாக இருக்க வேண்டும் என சாம் ஆல்ட்மேன் கூறி இருக்கிறார். உலகளவில் கால்குலேட்டர், இண்டர்நெட் போன்றவற்றின் வருகை நாம் செயல்படும் விதத்தையே எப்படி மாற்றி அமைத்தனவோ அதே போல தான் ஏஐயும் தன் பங்கிற்கு மாற்றங்களை கொண்டு வரும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications