சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: மைக்ரோசாப்ட் உலகின் முன்னணி டெக் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது . இதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சத்ய நாதெல்லா. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் தான் சத்ய நாதெல்லா.
சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் தலைமை பொறுப்பு வகித்து வந்த நிலையில் திடீரென சில பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார் . இதுதான் டெக் உலகில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. அனைத்து அமெரிக்க டெக் நிறுவனங்களுமே ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற போட்டியில் தீவிரமாக இருக்கின்றன.

குறிப்பாக ஏஐ பிரிவில் ஓபன் ஏஐ, பெர்பிளெக்சிட்டி ஆகிய ஓபன் நிறுவனங்கள் மிக வேகமாக முதலிடத்தில் பிடித்து வருகின்றன. இதன் காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட் , எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எல்லாம் சிக்கல் ஏற்பட்டுள்ளன. எப்படியாவது ஏஐ பிரிவில் முதலிடம் வரவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. இந்த சூழலில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லாவை குறிப்பிட்ட சில பொறுப்புகளில் இருந்து விடுவித்து இருக்கிறது.
இது தொடர்பாக சத்ய நாதெல்லா அனைத்து மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கும் ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்திருக்கிறார். அதில் தற்போது நம்முடைய தொழில்கள் ஒரு மிகப்பெரிய ஏஐ மாற்றத்திற்கு மத்தியில் இருக்கின்றன, இந்த சூழலில் நாம் வழக்கமான வணிகத்தை நிர்வகிக்க வேண்டும் அதனை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் அதே வேளையில் இந்த புதிய பிரிவிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உலகமே மாறி வரக்கூடிய சூழலில் அது சம்பந்தப்பட்ட உற்பத்தி திறன்களை நம் நிறுவனம் மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது எனக் கூறியிருக்கிறார். நம்முடைய தொழில்களையும் ஏஐ நுட்பத்துடன் ஒருங்கமைப்பது தான் நம் நிறுவனத்தின் வெற்றிக்கு உதவும் எனக் கூறியிருக்கும் , அவர் பல்வேறு நிறுவனங்களின் ஏஐ மாற்றத்திற்கு உதவக்கூடிய ஒரு நிறுவனமாக மைக்ரோசாப்ட் மாற வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதற்கு ஏற்ற வகையில் விற்பனை ,மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக கூறி இருக்கும், அவர் தற்போது நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஜட்சன் அல்தாஃப் இனி மைக்ரோசாப்டின் கமர்சியல் வணிக பிரிவுக்கு தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என அறிவித்திருக்கிறார் . 9 ஆண்டுகாலம் நிறுவன வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஜட்சன் அல்தாஃப் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொறுப்புகளை அல்தாஃபிடம் வழங்கி இருப்பதன் மூலம் அடுத்த கட்டமாக சத்ய நாதெல்லா ஏஐ தொழில்நுட்ப ரீதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வளர்ச்சி பெறுவதற்கு தேவையான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications