திருவனந்தபுரம்: ஆன்லைன் நிதி மோசடிகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முதலீடு செய்வதற்கான அப்ளிகேஷன்கள், இணையதள URL-கள், சமூக வலைதள சுயவிவரங்கள் மற்றும் தொலைபேசி எண்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உதவும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) கருவியை காவல்துறை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் சுமார் ரூ. 200 கோடி நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில், ஆரம்பத்திலேயே நிதி மோசடிக்குப் பயன்படுத்தப்படும் இணையதளங்களைப் பொதுமக்கள் கண்டறிய உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த AI கருவியை உருவாக்கும் நிறுவனத்தை காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து கண்காணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த AI உருவாக்க இருக்கும் நிறுவனம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. காவல்துறையின் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் பெற உதவும் அதிகாரப்பூர்வ காவல்துறை செயலி "Pol-App" உடன் இந்தக் கருவி இணைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் மக்கள் சந்தேகத்திற்குரிய URLகள், லிங்க்குகள், சமூக வலைதள கணக்குகள், மொபைல் நம்பர்கள் போன்றவற்றை இந்த AI தளங்களில் copy-paste செய்ய முடியும். மக்கள் வழங்கும் தகவல்கள், மாநில மற்றும் மத்திய சட்ட அமலாக்க தரவுகளில் உள்ள தகவல்களுடன் ஒப்பிடப்படும்.
AI கருவி 3 வண்ண குறியீடுகளைக் காண்பிக்கும். அதன்படி வழங்கப்பட்ட லிங்க்குகள், மொபைல் நம்பர்கள் போன்றவை உண்மையானவை என்றால், AI அவற்றை பச்சை நிறத்தில் காண்பிக்கும். அதாவது அவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று பொருள். நீங்கள் கொடுத்த லிங்க்குகள் மற்றும் மொபைல் நம்பர்கள் ஏற்கனவே மோசடி செய்ய பயன்பட்டிருந்தால், அவை சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும். தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து AI-க்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், அது ஆரஞ்சு நிறத்தில் காண்பிக்கப்படும். இது போன்ற சமயங்களில், மேலும் தகவல்கள் பெற தேசிய சைபர் குற்றப்பிரிவு உதவி எண் 1930-ஐ தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த AI கருவியை உருவாக்குவதற்கான முன்மொழிவை போலீசார் மாநில IT மிஷன் மற்றும் ஸ்டார்ட் அப் மிஷன் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த கருவியின் முன்மாதிரி-ஐ ஆறு மாதங்களுக்குள் வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஆப்-கள் அல்லது AI கருவிகள் உருவாக்கப்பட்டால், அனைத்து மாநிலங்களிலும் நிதி சார்ந்த மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இது போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டால் அதன் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் இதன் பயன்பாடுகள் அதிகரித்து மோசடி சம்பவங்கள் குறையும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications