உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் உலக பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டிருப்பதை போல ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன.
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர் .45 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த நிகழ்வில் 45 கோடிக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பல்வேறு உலக பிரபலங்களும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புனித நீராடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் ஆகும்.
உலகிலேயே மிகப்பெரிய மதரீதியான ஒரு நிகழ்வாக மகா கும்பமேளா நிகழ்வு பார்க்கப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர் .ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவெல் ஜாப்ஸ் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு சர்வதேச அளவில் பலரும் மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்ட வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு வேறு சில பிரபலங்களும் இதில் கலந்து கொண்டதாக வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, லையோனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் கங்கா ,யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமாக கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

அதேபோல அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் இதில் கலந்து கொண்டதை போல வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோரும் இந்த மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதை போன்ற வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.
ஹாலிவுட் நட்சத்திரங்களான வில் ஸ்மித் போன்றோரும் இதில் கலந்து கொண்டிருப்பதாக ஏஐ வீடியோ வெளியாகியுள்ளது. குறிப்பாக உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் கலந்துகொண்டு கங்கையில் புனித நீராடுவது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. Artificial Budhi என்ற பக்கத்தில் தான் இந்த ஏஐ வீடியோக்கள் வெளியாகி பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Story written by: Devika


Click it and Unblock the Notifications