உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வேலையை ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கி விட்டன . கோடிங் எழுதுவது, ஹெச்.ஆர் வேலைகளை பார்ப்பது, பிபிஓ பணிகளை மேற்கொள்வது என மனிதர்கள் செய்து வந்த பல்வேறு வேலைகளையும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் செய்யத் தொடங்கிவிட்டன.
ஏஐ கருவிகள்: எதிர்காலத்தில் மனிதர்களின் அனைத்து வேலை வாய்ப்புகளையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பறித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் என்னதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மனித மூளைக்கு நிகரானதாக அதனால் மாற முடியாது என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சர்வதேச அளவிலான கணித போட்டி நடைபெற்றது.

கணித போட்டி: International Maths Olympiad என்பது ஆண்டுதோறும் உலகளவில் நடத்தப்படும் மிகப்பெரிய கணிதப் போட்டி ஆகும். 100க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொள்வார்கள். 20 வயதுக்கு உட்பட்ட பள்ளி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான போட்டி இது. கணிதம் சம்பந்தப்பட்ட பல்வேறு சிக்கலான கேள்விகள் இதில் முன்வைக்கப்படும் . அதற்கு திறம்பட பதிலளிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
உலகிலேயே கடினமான போட்டி: உலகிலேயே மிக கடினமான கணித போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கணித போட்டியில் மாணவர்களோடு ஏஐ கருவிகளும் பங்கேற்றன. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சாட் பாட்டின் அதிநவீன வெர்சனும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடியும் இதில் பங்கேற்றது. மொத்தம் 6 கடினமான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் ஜெமினி ஏஐ மற்றும் சாட் ஜிபிடி 5 கேள்விகளை திறம்பட தீர்த்துள்ளன.
ஜெமினி ஏஐ, சாட் ஜிபிடி: 42 மதிப்பெண்களில் கூகுளின் ஜெமினி ஏஐ மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஆகியவை 35 மதிப்பெண்கள் பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளன. கடந்த ஆண்டு இவை 4 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்த நிலையில் இந்த ஆண்டு அது 5 கேள்வியாக உயர்ந்துள்ளது என்றும், கணித சிக்கல்களை தீர்ப்பதில் ஏஐ கருவிகள் இவ்வளவு முன்னேறி இருப்பதும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக போட்டி நடுவர்கள் தெரிவிக்கின்றனர்.
42 மதிப்பெண் பெற்ற மனிதர்கள்: ஏஐ அளித்த பதில்களை 5 நடுவர்கள் ஆய்வு செய்ததாகவும், இவை தெளிவாகவும் துல்லியமாகவும் பதில் தந்துள்ளன என்றும் போட்டி நடுவர்களில் ஒருவரான கிரனார் தெரிவித்திருக்கிறார். இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களில் 10 மாணவர்கள் 35 மதிப்பெண்களை பெற்றனர். 5 மாணவர்கள் 6 கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்து ஏஐ கருவிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி 42 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஏஐ செயலிகள் வளர்ச்சி அடைந்தாலும் சிக்கல்களை தீர்ப்பதில் மனித மூளைக்கு நிகராக இன்னும் வளரவில்லை என்பதையே இது காட்டுகிறது. இருந்தாலும் இந்த திறனை ஏஐ வளர்த்து கொண்டு வருகிறது என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.
written by : Devika Manivannan


Click it and Unblock the Notifications