சுவிஸ் நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பேசிய ஏஐ நிறுவனமான அன்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடெய் அதிர்ச்சி தரும் கணிப்பு ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த ஐடி ஊழியர்கள், டெக் ஊழியர்களை கதிகலங்க செய்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அடுத்த 6 முதல் 12 மாதங்களில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செய்யும் பெரும்பாலான அல்லது அனைத்து வேலைகளையும் முடிக்கும் நிலைக்கு வரலாம் என்று அவர் கூறினார்.

ஆனால் அவரது பேச்சில் ஒரு முக்கியமான உண்மை பலரும் கவனிக்கத் தவறியுள்ளனர். "அனைத்து பணிகளையும் AI விரைவுபடுத்த முடியாது" என்று அவர் குறிப்பிட்டார். அதாவது ஏஐ மூலம் வேலைவாய்ப்புகள் மறைந்துவிடாது, ஆனால் குறைத்துவிடும் என்பது தான் அவரின் கருத்தில் உள்ள முக்கியமான விஷயம்.
அன்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடெய் சொல்வது போல் நடந்தால் ஐடி மற்றும் டெக் சேவை துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் இரண்டாக பிரியும். இதில் ஒரு பகுதி ஊழியர்களின் வேலைவாய்ப்பு மாயமாகும், இன்னொரு பகுதி ஊழியர்களின் மதிப்பு உயரும்.
ஒரு பகுதி அழியும்: கோடிங் எழுதுதல், Debugging, டெஸ்டிங், கொடுக்கப்பட்ட ஸ்பெக்-களை செயல்படுத்துதல் போன்ற பணிகளில் மட்டும் ஈடுப்படுபவர்கள் பணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காரணம் இந்த பணிகளை AI மூலம் விரைவாகவும் குறைந்த செலவிலும் செய்ய முடியும். இந்த வேலைகளை மட்டும் செய்யும் பொறியாளர்கள் AI-யுடன் போட்டியிட வேண்டிய நிலைக்கு வருவது மட்டும் அல்லாமல் ஒப்பிடு செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
மற்றொரு பகுதியினரின் மதிப்பு பெருகும்: ஆதாவது வாடிக்கையாளர் தேவைகளை புரிந்துகொள்வது, தெளிவில்லாத வணிக பிரச்சினைகளை தொழில்நுட்ப தீர்வை அளிப்பது போன்ற பணிகளை செய்யும் forward deployed engineer பணிகள் இனி வரும் காலத்தில் முக்கியமானதாக மாறும். AI இதை செய்ய முடியாது. தனக்கும், தனது நிறுவனத்திற்கும் என்ன தேவை என்பதில் தெளிவில்லாமல் இருக்கும் நிறுவன தலைவர்களுடன் நடக்கும் உரையாடலை AI விரைவுபடுத்த முடியாது.
இதுப்போன்ற ஏஐ செய்ய முடியாத, அதேபோல் மனிதர் ஏஐ மூலம் வேகமாகவும், சிறப்பாக செய்ய முடியும் பணிகள் அனைத்தும் இனி வரும் காலத்தில் மிகவும் முக்கியமானதாக மாறும். இவர்களுக்கு பணிக்கு பாதுகாப்பு கிடைப்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான சம்பளமும் கிடைக்கும்.
இப்போது ஐடி ஊழியர்களுக்கு இருக்கும் முக்கியமான கேள்வி இதுதான், "நான் எந்த பகுதியை தேர்வு செய்கிறேன்?" ஒரு பகுதி சுருங்கும், மற்றொன்று விரிவடைகிறது. இதில் எந்த பகுதிக்கு செல்ல வேண்டும், அதற்கு எந்த வகையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.
இதேபோல் ஏஐ தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரித்தது மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் தற்போது சந்தையில் உருவாகி வருகிறது. உதாரணமாக forward deployed engineer இதுப்போன்ற ஒரு பதவி இதற்கு முன்பு இருந்தது இல்லை, இப்படி பல புதிய பணிகள் உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications