தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதி வெளியீடு என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.
தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. தற்போது தேர்தல் களத்தில் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவில் வரக்கூடிய சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு இருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது உருவ சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்த அவர் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் தேர்தலுக்கான அதிமுகவின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
இதன்படி அதிமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் சுமையை போக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் கருணைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என திமுக ஆட்சியில் மக்களுக்கு நிதிச்சுமை அதிகரித்திருப்பதால் ஒருமுறை கருணை தொகையாக 10,000 ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறினார்.அதாவது வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்கப்படும் என கூறியுள்ளார். இது தவிர பொங்கல் பரிசு தொகுப்போடு இனி ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு உதவி தொகை 8000 ரூபாயாக இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்த அவர் நகரப் பகுதிகளில் நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்றார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட் ஆக உயர்த்தப்படும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் 1400 யூனிட் ஆக உயர்த்தி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே அதிமுக சார்பாக இரண்டு கட்டங்களாக வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி குலவிளக்கு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு அதன் மூலம் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை கொண்டு வரப்படும் என கூறினார். வங்கிகளில் பெற்ற கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும், முதியோர் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார். திமுக சார்பாக ஏற்கனவே 5000 ரூபாய் மகளிர் உரிமை தொகை, 3000 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. தற்போது போட்டியாக அதிமுக 10000 ரூபாய் கருணை தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் மக்கள் வாக்குகளை பெறுவதில் 5000 ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கும் 10000 ரூபாய் கருணை தொகைக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications