ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கும் போதே மீண்டும் மாகராஜா-வாக மாற்றும் இலக்குடன் தான் கைப்பற்றியது. சந்திரசேகரன் தலைமையிலான ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றிய நாளில் இருந்து சில தடுமாற்றங்கள் இருந்தாலும் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் நிர்வாகம் மேம்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏர் இந்தியாவின் விமானச் சேவையை உலகம் முழுக்க விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் இந்தியாவின் முக்கியமான வர்த்தகப் பகுதிகளை இணைக்கும் விதமாக டாடா குழுமம் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 470 விமானங்களை வாங்க உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் உறுதியான நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாட்டின் அதிபர்கள் இந்தியாவையும், ஏர் இந்தியா நிறுவனத்தையும் பாராட்டி, நன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஏர் இந்தியா
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஜனவரி 2022ல் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றிய நிலையில் ஒரு வருட வளர்ச்சியைக் கொண்டாடும் விதமாக ஏர் இந்தியா நிர்வாகம் ஏர்பஸ் நிறுவனத்திடம் 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் 220 விமானங்களையும் ஆர்டர் செய்துள்ளது.
470 விமானங்கள்
ஏர் இந்தியா தற்போது ஆர்டர் செய்துள்ள 470 விமானங்களின் மொத்த மதிப்பு 70 முதல் 80 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியாவின் 70 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர் மூலம் வருவாய், வேலைவாய்ப்பு, உற்பத்தி எனப் பல நாடுகள் இதன் மூலம் பலன் பெற உள்ளதால் உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டியும், நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏர் இந்தியா - போயிங் மத்தியிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க 220 விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பதை அறிவிக்கப் பெருமைப்படுகிறேன் எனக் கூறினார். இந்த ஒப்பந்தம் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அமெரிக்காவின் 44 மாநிலத்திலும் பலன் அளிக்கும். மேலும் அதிகப்படியானோருக்கு 4 வருட காலேஜ் டிகிரி இல்லாமல் இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
ஏர் இந்தியா - போயிங்
இதேவேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி பேசுகையில், இந்த ஏர் இந்தியா - போயிங் மத்தியிலான வரலாற்றுச் சிறப்புமிக்க 220 விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் மூலம் இரு தரப்புக்கும் பலன் கிடைக்கும் என அறிவித்தனர். இதேபோல் ஏர் இந்தியாவுக்குக் கூடுதலாக 70 விமானங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டது.
ஏர் இந்தியா - ஏர்பஸ்
இதோடு நரேந்திர மோடி, ரத்தன் டாடா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இதர பல தலைவர்கள் கலந்துக்கொண்ட வீடியோ கான்பிரன்ஸ்-ல் ஏர் இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு ஏர்பஸ் உதவுவது ஒரு வரலாற்றுத் தருணம் என்று ஏர்பஸ் தலைமை நிர்வாகி குய்லூம் ஃபௌரி கூறினார். மேலும் இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான நட்புறவில் ஒரு மைல்கல் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக்
மேலும் பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக், பிரிட்டன் நாட்டின் ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின் உடன் தயாரிக்கப்பட்ட 250 ஏர்பஸ் விமானங்களை ஏர் இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது மூலம் பிரிட்டன் நாட்டின் Wales மற்றும் Derbyshire பகுதியில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவை மேம்படும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரிட்டன்
ஏர் இந்தியா - ஏர்பஸ் மத்தியிலான 250 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தைப் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் வர்த்தகச் செயலாளர் கெமி படேனோச் ஆகியோர் வரவேற்றனர். பிரிட்டன் பொருளாதாரத்தின் தற்போதைய பொருளாதாரத்தைப் பார்க்கும் போது ஏர் இந்தியாவில் டீல் ஒரு ஜாக்பாட்டாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications