ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் துபாயில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அங்குள்ள விமான நிலையத்தில் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள்ளேயும், ஓடு பாதையிலும் தண்ணீர் தேங்கி இருக்கும் வீடியோ சமுக வலைத்தளத்தில் டிரெண்டானது. இதன் காரணமாக, பல்வேறு விமான நிறுவனங்கள் துபாய்-க்கும் துபாயை இணைக்கும் தங்களது விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா, துபாய்க்கு செல்லும் மற்றும் துபாயில் இருந்து புறப்படும் தனது விமான சேவைகளை முழுமையாக ரத்து செய்துள்ளதாக இன்று (ஏப்ரல் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. துபாய் விமான நிலையத்தில் நிலவி வரும் தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகளையே இதற்கான காரணமாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 21 ஆம் தேதி வரை பயணம் செய்ய ஏர் இந்தியா விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு இந்த விமான ரத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மறுமுறை பயணத்திற்கான (reschedule) கட்டணம் தள்ளுபடி அல்லது முழு பணத் திருப்பிச் செலுத்துதல் (full refund) ஆகிய வசதிகள் வழங்கப்படும் என ஏர் இந்தியா உறுதி அளித்துள்ளது. இதனால் விமான பயணிகளுக்கு எந்த வகையிலும் பணம் இழப்பு ஏற்படாது.
ஏர் இந்தியா போல், குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ-ம் துபாயில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட பதிவில், பயணிகளை விமான சேவை பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை செய்துள்ளது. விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்பு தங்களது விமான நிலவரத்தை (flight status) கவனித்து செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் துபாய் விமான நிலையத்தின் இயக்க பாதிப்பை காரணம் காட்டி, எமிரேட்ஸ் விமான நிறுவனம், ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு 11.59 மணி (GMT) வரை, துபாய் வழியாக இணைப்பு சேவைகளை பயன்படுத்தும் அனைத்து பயணிகளுக்கும் செக்-இன் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல் துபாய் இறுதி இடமாக பயணம் செய்யும் பயணிகள் வழக்கம் போல் செக்-இன் செய்து பயணம் மேற்கொள்ளலாம் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் துபாய் விமான நிலையத்தில் இருந்து விமான புறப்பாடு மற்றும் வருகைகளில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. http://emirates.com என்ற இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணையை (flight schedule) பயணிகள் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications