Air India: அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் இண்டர்நேஷனல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நொடிகளில் மேகனிநகர் பகுதியில் உள்ள BJ மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது இந்தியாவை மொத்தமாக உலுக்கியுள்ளது. இந்த நிலையில் விபத்து தொடர்பாக அடுத்துத்து முக்கியமான விஷயங்கள் வெளியாகி வருகிறது.
மரணமடைந்தவர்களின் உடல் மீட்பு:
ஏர் இந்திய விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர், ஆனால் வெள்ளிக்கிழமை மீட்புப் பணிகளில் புதிதாக 29 உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து, மொத்த மரண எண்ணிக்கை 270 ஆக உயர்ந்ததுள்ளது கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது. மரணம் அடைந்தவர்களின் உடல்களை அனைத்தும் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. முன்பு மரண எண்ணிக்கை 265 என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 241 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன், BJ மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த மருத்துவர்கள், மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மற்றும் அருகிலுள்ள மேகனிநகர் மக்கள் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு உள்ளது.
மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 270 உடல்கள், அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக, மரண எண்ணிக்கை 265 என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதோடு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தீவிரமாக எரிந்ததால், அடையாளம் காண DNA பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 11 DNA மாதிரிகள் பொருந்தியுள்ளன, மேலும் ஒரு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிளாக் பாக்ஸ் மீட்பு:
இந்த இக்கட்டான சூழ்நிலையில் விபத்தில் வெடித்து சிதறிய ஏர் இந்திய விமானத்தின் பிளாக் பாக்ஸ், BJ மருத்துவக் கல்லூரி மாணவர் மெஸ் கட்டிட மொட்டை மாடியில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த பிளாக் பாக்ஸ், விபத்துக்கான காரணத்தை அறிய முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று இந்திய விமான விபத்து விசாரணை பணியகம் (AAIB) தெரிவித்துள்ளது. மேலும், விமானத்தின் Emergency Location Transmitter வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த சில நொடிகளுக்கு முன், AI 171 விமானத்தின் விமானி "மேடே, மேடே, மேடே, " (Mayday, Mayday, Mayday) என வான்வழி கட்டுப்பாட்டு மையத்திற்கு (ATC) சிக்னல் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாடா குழுமம் முக்கிய அறிவிப்பு:
டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியா இணைந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.25 கோடி நிதி உதவி அறிவித்துள்ளன. இதில், டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் சார்பில் ஏற்கனவே 1 கோடி ரூபாய் தொகையை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்தது. தற்போது ஏர் இந்தியா சார்பில் உடனடி நிவாரணமாக ரூ.25 லட்சம் கூடுதலாக அளிக்க உள்ளது. இந்த அறிவிப்பு, ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிடப்பட்டது.
மேலும், ஏர் இந்தியா விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை முழுமையாக ஏற்கவும், காயப்பட்டு உள்ள BJ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கவும், செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் டாடா குழுமம் உறுதியளித்துள்ளது. BJ மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி, விமானம் மோதியதால் சேதமடைந்ததால், அதனை மறுகட்டமைப்பு செய்யவும் டாடா குழுமம் ஏற்கனவே உறுதி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications