அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் AI 171, 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானது இந்திய மக்களை மட்டும் அல்லாமல் வெளிநாட்டினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஏர் இந்தியா விமான நிலையத்தில் பயணித்த 242 பேரில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டவர், 7 போர்ச்சுகீசியர்கள் ஆகும். இதனால் இந்திய அரசு மற்றும் அல்லாமல் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலன் குறித்து தெரிந்துக்கொள்ளவும் உதவி செய்யவும் 3 நாடுகள் உயர்மட்ட நிர்வாகம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாத்-க்கு சென்று விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்கிறார். மேலும் இங்கிலாந்து உயர் ஆணையம் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து உதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
விமான விபத்து எப்படி நடந்தது: அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் காட்விக் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 171, பிற்பகல் 1:38 மணியளவில் புறப்படும்போது விபத்துக்குள்ளானது. இந்த போயிங் 787-8 விமானம் மேகானி நகர் அருகே விழுந்து பெரும் வெடிப்பு சத்தத்துடன் பெரும் புகை மண்டலத்தை உருவாக்கியது. இந்த துயர சம்பவம் இந்திய விமானத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் ஹெல்ப் லைன் நம்பர்: இந்த விமான விபத்தில் 53 பிரிட்டன் நாட்டினர் இருந்த நிலையில், பிரித்தானிய உயர் ஆணையம், விபத்து குறித்த தகவல்களையும், பயணிகள் குறித்த தகவல்களையும் உடனடியாக உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளது. பிரித்தானிய குடிமக்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் தூதரக உதவி பெற வேண்டுமானால் 020 7008 5000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷாவின் நேரடி ஆய்வு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ய அகமதாபாத் சென்று கொண்டிருக்கிறார். இதற்கிடையில் உள்ளூர் மக்கள், தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்பு மற்றும் சிகிச்சை: ஏர் இந்தியா விமான விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா நிர்வாகம், பயணிகளின் குடும்பங்களுக்கு உதவி வழங்க 1800 5691 444 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications