ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அனைவரையும் வாட்டி வதைக்கிறது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் வித்திட்டுள்ளது. இதனால் விமான எரிபொருட்களின் விலையும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் விமானங்களை இயக்க அதிக செலவு ஏற்படுவதாக கூறி இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்க இருப்பதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வை முழுமையாக பயணிகள் மீது சுமத்த முடியாத சூழலில் விமான சேவை நிறுவனங்கள் நாளுக்கு நாள் செலவு உயர்கிறது நிலைமை கைமீறி போகிறது என தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம், தனது சர்வதேச விமான சேவையை 27 சதவீதம் குறைத்துள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவையையும் குறைக்க உள்ளது. ஏர் இந்தியா ஒரு வாரத்திற்கு சுமார் 4,400 விமானங்களை இயக்கும் நிலையில், இதில் சுமார் 3,600 விமானங்கள் உள்நாட்டிலும், மீதமுள்ள 800 விமானங்கள் சர்வதேச அளவிகும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், சர்வதேச சேவையில், ஏற்கனவே அறிவித்திருந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக, அதே காலகட்டத்தில் சில உள்நாட்டு வழித்தடங்களிலும் எங்கள் செயல்பாடுகளைத் தற்காலிகமாக சீரமைத்துள்ளோம் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட சில வழித்தடங்களில் விமான சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா கூறுகிறது.
உள்நாட்டு விமான சேவை 20 முதல் 22 சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும், எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் உயர்வதே இந்த முடிவுக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்களால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு, மாற்று விமானங்களில் இடம், கட்டணமின்றிப் பயணத் தேதியை மாற்றிக்கொள்ள அனுமதி அல்லது சூழலுக்கு ஏற்ப முழுப் பயண கட்டணத்தையும் திரும்ப வழங்குவது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதன்படி பார்த்தால் சுமார் 800 விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்துகிறது. திடீரென விமான சேவையில் 800 விமான சேவைகள் குறைப்பு என்பது உல்நாட்டு விமான போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே 26,700 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்திருந்தது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்திற்கு ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட விமான எரிபொருள் விலை உயர்வு மிகப்பெரிய தலைவலியாக வந்து அமைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications

