மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக பல நாடுகளில், பல நிறுவனங்கள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மஸ்கட் (ஓமன்) விமான சேவையை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
மார்ச் 3, 2026 முதல் மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மஸ்கட்டில் இருந்து முதல் விமானம் திருச்சிராப்பள்ளிக்கு காலை 10:25 மணிக்கு (உள்ளூர் நேரம்) புறப்படும். இது இந்தியாவில் இருந்து ஓமனுக்கு மீண்டும் பயணிகள் செல்லும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மஸ்கட் விமான சேவை மீண்டும் தொடங்குவது மூலம் அங்கு சிக்கியுள்ள பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும்.
இருப்பினும், பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் மார்ச் 3 அன்று இரவு 11:59 மணி வரை (இந்திய நேரம்) ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்து மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. விளைகுடா நாடுகளில் இருக்கும் விமான நிறுவனங்களும், விமானங்களும் சேவையை நிறுத்தியிருப்பதை தாண்டி உலக நாடுகளில் இகுந்து விளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் உலகெங்கும் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டின் 8 விமான நிலையங்களில் இருந்து சுமார் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த முக்கியமான சூழ்நிலையில் தான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது பயணிகளுக்கு நம்பிக்கையை அளிக்கிறது.
இந்த சூழ்நிலையில் மஸ்கட்-ல் இருந்து தமிழ்நாட்டுக்கு வர திட்டமிட்டுள்ளவர்கள் விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் சமீபத்திய அப்டேட்களை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். மேலும் தகவல்கள் கிடைக்கும் போது பயணிகள் உடனடியாக அறிவிக்கப்படுவர்.


Click it and Unblock the Notifications