இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையின் ஒழுங்குமுறை அமைப்பான DGCA, ஏர் இந்தியாவின் மலிவு விலை விமான சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டுதலின்படி, ஏர்பஸ் A320 விமானத்தின் பாகங்களை சரியான நேரத்தில் மாற்றவில்லை, இதோடு பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து விதிமுறைகளை பின்பற்றியதாக கணக்கு காட்டியுள்ளது. இது தொடர்பாக மார்ச் மாதம் இந்நிறுவனம் கண்டிக்கப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தத் தகவல் அரசின் மெமோ மூலம் தெரிய வந்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இந்த விவகாரம் தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த அறிக்கையில், தவறை ஒப்புக்கொண்டு, இந்திய ஒழுங்குமுறை அமைப்பின் விதிமுறைக்கு தேவையான திருத்த நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஜூன் மாதம் அகமதாபாத்தில் நிகழ்ந்த போயிங் ட்ரீம்லைனர் AI 171 விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தின் மீதான கவனம் அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 242 பயணிகளில் ஒருவர் தவிர அனைவரும் உயிரிழந்தனர், இந்த விபத்து குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இயந்திர பாகங்கள் தொடர்பான பிரச்சினை மார்ச் 18 அன்று முதலில் கண்டறியப்பட்டது, இது அகமதாபாத் விபத்துக்கு முன்பே நிகழ்ந்ததுள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது DGCA அமைப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-ன் மூன்று ஏர்பஸ் விமானங்களில் அவசர வெளியேற்ற பாதைகளின் அதாவது எஸ்கேப் ஸ்லைடுகள் பரிசோதனைகளை குறித்த நாளில் பரிசோதனை செய்யவில்லை, ஜூன் மாதத்தில் விமானிகளின் பணி நேர விதிமுறைகளை மீறியது குறித்தும் DGCA அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய விதிமுறை மீறல்கள், விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்பது, டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் 115-க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டு, 50-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தினமும் 500 விமானங்களை இயக்கி பயணிகள் விமான சேவை அளித்து வருகிறது. இந்தியாவில் பெரிய அளவில் சேவை அளித்து வரும் போதிலும் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மீறல்கள் இந்நிறுவனத்தின் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications