சென்னை: ஏர் இந்தியா நிறுவனம், வெள்ளிக்கிழமை (மே 24) தங்களது புதிய நிதி இயக்குநராக (CFO) சஞ்சய் சர்மாவை நியமித்ததாக அறிவித்துள்ளது. இவரது பதவிக்காலம் ஜூன் 10, 2024 முதல் அமலுக்கு வரும் எனவும் ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சஞ்சய் சர்மா, ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சனுக்கு கீழ் பணிபுரிவார். கார்ப்பரேட் நிதி, முதலீட்டு வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சஞ்சய் சர்மா, டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிதி இயக்குநர் பதவியில் இருந்து ஏர் இந்தியாவுக்கு வருகிறார்.

டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு முன்னதாக, டாடா ரியல்டி இன்பராஸ்டக்ச்சர் நிறுவனத்தின் நிதி இயக்குநராகவும், டாய்ச் வங்கி குழுமத்தின் பங்கு மூலதன சந்தைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் சஞ்சய் சர்மா. இதற்கு முன்னதாக, மும்பையில் உள்ள டிஎஸ்பி மெர்ரில் லிஞ்ச் மற்றும் ஹாங்காங்கில் இருந்து மெர்ரில் லிஞ்ச் ஆசிய பசிபிக் வர்த்தகத்தைத் தலைமையேற்று நடத்தி வந்தார்.
இப்படி முதலீட்டுச் சந்தையிலும், நிதித்துறையிலும் சுமார் 30 ஆண்டு காலம் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார் ஏர் இந்தியாவின் புதிய CFO சஞ்சய் சர்மா. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஏர் இந்தியாவில் பணியாற்றி ஓய்வு பெறும் வினோத் ஹேஜ்மாடி-யின் இடத்தை சஞ்சய் சர்மா பிடிக்க உள்ளார்.
ஏர் இந்தியாவில் ஏற்கனவே பல மாற்றங்கள் நடந்து வரும் வேளையில் ஊழியர்களின் போராட்டம், பணிநீக்கம், சேவை முடக்கம் எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், உயர்மட்ட நிர்வாகத்தில் தற்போது நடக்கும் மாற்றம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதேபோல் டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களை இணைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடந்து வரும் வேளையில் புதிய CFO சஞ்சய் சர்மா-வின் பங்கீடு மிகவும் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் இருக்கும்.
இந்த நிலையில் ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் கூறுகையில் "ஏர் இந்தியாவின் தலைமை குழுவில் சர்மாவை இணைத்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏர் இந்தியாவின் தொடர்ச்சியான மாற்றத்திற்கான அவரது பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நிறுவனத்திற்கு வினோத் ஹேஜ்மாடி-யின் நீண்டகால சேவையையும், அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பையும் நாங்கள் பாராட்டுகிறோம்" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications