விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் ஒவ்வொரு விமான நிறுவனமும் வெவ்வேறு வகைகளில் உணவு மெனுக்களை அளித்து வருகின்றது.
இந்த நிலையில் ஏர் இந்தியா விமானம் உள்நாட்டு விமான பயணிகளுக்கு புதிய உணவு மெனுவை அறிவித்துள்ளது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏர் இந்தியா மெனு
ஏர் இந்தியா விமானம் தனது உள்நாட்டு பயணிகளுக்காக புதிய மனுவை இன்று அதாவது அக்டோபர் 3ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் புதிய மெனுவில் உள்ள உணவை இன்று முதல் ருசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
எக்கனாமிக் வகுப்பு பயணிகள்
ஏர் இந்தியா விமானத்தில் எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சீஸ் காளான் ஆம்லெட், ட்ரை ஜீரா ஆலு குடைமிளகாய், பூண்டு தோசை, சோளம் தோசை ஆகியவை காலை உணவாக வழங்கப்படும். மேலும் வெஜிடபிள் பிரியாணி, மலபார் சிக்கன் கறி மற்றும் வெஜிடபிள் பொரியல் கலந்த சாப்பாடு மதிய உணவாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி காய்கறி கலந்த நூடுல்ஸ், சில்லி சிக்கன், வெண்ணிலா ஐஸ்க்ரீம் அல்லது தேநீர், காபி ஆகியவை வழங்கப்படும்
பிசினஸ் வகுப்பு பயணிகள்
அதேபோல் பிசினஸ் வகுப்பு உள்நாட்டு பயணிகளுக்கு குரோசண்ட், சர்க்கரை இல்லாத டார்க் சாக்லேட் ஓட்மீல் மஃபின், சீஸ் மற்றும் ட்ரஃபிள் ஆயில் துருவல் முட்டை, கடுகு கிரீம் தடவப்பட்ட சிக்கன் சாசேஜ் ஆகியவை வழங்கப்படும். மேலும் ஆலு பரோட்டா, மெது வடை மற்றும் பொடி இட்லி ஆகியவை காலை உணவாக வழங்கப்படும். , மதிய உணவாக மீன் குழம்பு, கோழி செட்டிநாடு, உருளைக்கிழங்கு பொடிமாஸ் உடன் கூடிய சாப்பாடு வழங்கப்படும். அதுமட்டுமின்றி சிக்கன் 65 மற்றும் சிக்கன் சாண்ட்விச்களையும் வழங்கும்.
புதிய மெனு அறிவிப்பு ஏன்?
சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாச ஏர் மற்றும் ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மெனுக்களை அறிவித்ததால் ஏர் இந்தியா நிறுவனமும் புதிய மெனு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications