டாடா குழுமம் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியாவை வாங்கிய பின்பு பல மாற்றங்களை செய்து வரும் வேளையில், தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், ஏர் இந்தியா தனது பெண் கேபின் க்ரூ ஊழியர்களின் சீருடையில் பெரும் மாற்றம் செய்ய திட்டமிட்டு வருகிறது.
ஏர் இந்தியாவின் 60 ஆண்டுகள் வரலாற்றில், விமானப் பணிப்பெண்கள் இந்திய பாரம்பரிய உடையான புடவைகளை சீருடையாக அணிந்து வருகின்றனர். இந்த நிலையில் டாடா குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் விமானப் பணிப்பெண்களுக்கு சீருடையில் இனி புடவையை கைவிட்டு, நவீன ஆடைகளை விரைவில் அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியாவின் புதிய சீருடை நவம்பர் 2023க்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த சீருடை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் இதை பிரபல ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ரா, சீருடையைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புடவைகளை நீக்க திட்டமிட்டு உள்ள டாடா குழுமம் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு சுரிதார் போன்ற பிற பாரம்பரிய மாற்று ஆடைகளை பரிந்துரைக்க இருப்பதாக ஹிந்துஸ்தான்டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதேபோல் ஆண்கள் தொடர்ந்து சூட்-களை அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நிறம் மாற வாய்ப்புகள் உள்ளது.
இதேபோல் புடவைகள் முற்றிலும் அகற்றப்படாது என்றும் கூறப்படுகிறது, இதேவேளையில் சிக்கலான புடவை உடுத்தும் முறையில் இல்லாமல் ரெடி டூ வியர் முறை கொண்டு வரப்படும் என்ற தகவலும் வந்துள்ளது. இதனால் அனைத்து ஏர் இந்தியா கேபின் க்ரூ ஊழியர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
ஏர் இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் புடவையின் பயன்பாடு உள்ளது, மறைந்த ஜே.ஆர்.டி.டாடா தொடங்கினார் இயல்பாக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கர்ட், ஜாக்கெட், தொப்பி ஆகியவற்றை நீக்க வேண்டும் என திட்டமிட்ட போது இந்திய கலாச்சாரத்தின் படி புடவை சீருடையாக மாற்றியது.
ஏர் இந்தியா நிறுவனம் மொத்தமாக கேம்பிள் வில்சன் தலைமையில் மாற உள்ளது, ஏற்கனவே விமானத்தின் பெயின்டிங் வடிவம், புதிய விமானங்களுக்கான இன்டிரீயர் டிசைன் போன்றவை மாற்றப்பட்டு உள்ள நிலையில் தற்போது கேபின் க்ரூ ஊழியர்களின் சீருடையும் மாற்றப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications