நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அடி வாங்காத துறையே இல்லை எனலாம். அந்தளவுக்கு இந்த கொரோனாவின் தாக்கம் உற்பத்தி மற்ற சேவை துறையை ஆட்டிப் படைத்துள்ளது.
அதிலும் விமானத் துறைக்கு இது மிக போராட்டமான காலமாகவே இருந்தது. ஏனெனில் முற்றிலும் முடக்கப்பட்ட விமான சேவையால் நிலைகுலைந்து போன நிறுவனங்கள், அடுத்த என்ன செய்வது என தெரியாமல் தடுமாறி வந்தன.
அந்த வகையில் அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா, ஏற்கனவே பலத்த நஷ்டத்தினால் பலத்த அடி வாங்கியிருந்தது. இந்த நிலையில் கொரோனாவினால் மேலும் பல மடங்கு நஷ்டம் கண்டுள்ளது.
முதல் காலாண்டில் பலத்த நஷ்டம்
நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் ஏர் இந்தியா நிறுவனம், சுமார் 2,570 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 785 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்ததாகவும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடனும் வழங்கினோம்
நடப்பு நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று பூரி தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே தொடர்ச்சியாக நஷ்டங்களை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது கொரோனாவும் சேர்ந்து கொண்டுள்ளது. இதனால் ஏர் இந்தியாவின் நிலை மிக மோசமாகியுள்ளது என்று மக்களவையில் பூரி எழுத்துபூவர்மாக கூறியுள்ளார்.
இண்டிகோவும் பலத்த நஷ்டம்
ஏர் இந்தியா மட்டும் அல்ல, முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோவும் முதல் காலாண்டில் 2,884.3 கோடி ரூபாயாக நஷ்டத்தினை கண்டது. இண்டிகோ நிறுவனம் தற்போது உள் நாட்டு விமான பயணிகள் சந்தை வெற்றிகரமாக 60 சதவீதத்தினை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவும் கொரோனாவால் பெருத்த நஷ்டத்தினை கண்டுள்ளது.
பெரும் பின்னடைவு தான்
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்டது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, பல நாடுகளிலும் இதே நிலை தான். இதனால் முற்றிலும் விமான சேவைகள் முடங்கின. பல விமான நிறுவனங்கள் செலவினை குறைப்பதற்காக சம்பள குறைப்பு, சம்பளம் இல்லா விடுமுறை, பணி நீக்கம் போன்ற அஸ்திரங்களை கையில் எடுத்தன. எனினும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாவது சம்பளம், விமான பராமரிப்பு செலவு என பல செலவுகள் இருந்தன. இதனால் தொய்வில் இருந்த விமான நிறுவனங்கள் இன்னும் பின்னடைவை சந்தித்துள்ளன.


Click it and Unblock the Notifications