இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் AI-171 விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகையை குறைக்கும் நோக்கத்தில் டாடா குழுமம் இறந்தவர்களுக்கும், அவரது குடும்பத்திற்குமான நிதி சார்ந்த தகவல்களை சமர்பிக்க வேண்டும் என பலரை கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுக்கும், மக்களுக்கும் விளக்கம் அளிக்கும் விதிமாக டாடா குழுமத்தின் ஏர் இந்தியா வெள்ளிக்கிழமை (ஜூலை 4, 2025) வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளது. இந்த விஷயம், விபத்து குறித்த முதல்கட்ட ஆய்வுகள் முடிந்து சில நாட்களில் வெளியான நிலையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்ற மற்றும் தவறானவை" என்று அறிவித்துள்ளது, இந்த செயல்முறை இழப்பீடு பெறுபவர்களை சரியாக அடையாளம் காணவும், தாமதமின்றி இடைக்கால இழப்பீடு வழங்கவும் ஒரு முக்கியமான செயல்முறையாகும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் என்னவென்றால், சில குடும்பங்களுக்கு விபத்தால் இறந்தவர்களுக்கும், இழப்பீடு பெற உரிமை கொண்டவராக கருதப்படும் நபர்கள் மத்தியிலான நிதி சார்ந்த தகவல்களை வெளிப்படுத்தும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இது இழப்பீடு தொகையை குறைக்க பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், ஏர் இந்தியா இதை மறுத்து, இந்த தகவல் சேகரிப்பு நடவடிக்கை இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படாமல் தடுக்கவும், இழப்பீடு பெறுபவரை சட்டபூர்வமாக அடையாளம் காணவும் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக விளக்கியுள்ளது.
ஏர் இந்தியா, விபத்து நடந்த சில நாட்களிலேயே முதல் இடைக்கால இழப்பீடு தொகையை 47 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், மற்ற 55 பேர் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, இழப்பீடு வழங்கும் செயல்முறை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, குடும்பங்களுக்கு ஒரு கேள்விப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது, இதில் நிதி சார்ந்த சார்பு (financial dependency) குறித்து "ஆம்/இல்லை" என்று பதிலளிக்க வேண்டும். இந்த படிவம், ஜூன் 15-ஆம் தேதி முதல் அகமதாபாத் நகரில் உள்ள தாஜ் ஸ்கைலைன் ஹோட்டலில் அமைக்கப்பட்ட உதவி மையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications