நியூஜெர்சி: ஏர் இந்தியா விமான சேவைகள் முன்பை போல தரமானதாக இல்லை என அவ்வப்போது பயணிகள் புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர். ஆனால் ஏர் இந்தியா சேவை இவ்வளவு மோசமாகிவிட்டதா என சிந்திக்க வைக்கும் அளவுக்கு ஒரு பயணியின் அனுபவம் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்ற பயணி தன்னுடைய மோசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

வினீத் என்பவர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நிவார்க் என்ற நகருக்கு ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் இருந்து இந்த நகரத்திற்கு நேரடியாக விமான சேவை வழங்குவதால் இந்த விமானத்தை தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ள அவர் இதற்காக 5 லட்சம் ரூபாய் ரூபாய்க்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்ததாக சுட்டிக்காட்டி உள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாஸில் டெல்லியில் இருந்து அமெரிக்கா வரை என்னுடைய திகில் பயணம் என தலைப்பிட்டு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை அவர் வரிசைப்படுத்தி உள்ளார்.
பொதுவாக நான் எமிரேட்ஸ் விமானங்களில் தான் பயணிப்பேன், ஆனால் நேரடி விமான சேவை வழங்குவதன் காரணமாக தான் இந்த முறை ஏர் இந்தியா விமானத்தை தேர்வு செய்தேன் என கூறியுள்ளார்.
நான் முன்பதிவு செய்த பிசினஸ் கிளாஸ் பிரிவில் இருக்கைகள் சுத்தமானதாக இல்லை
இருக்கைகள் தேய்ந்து போய் கிடந்தன, சரி என பொறுத்துக் கொண்டு இருக்கையை சாய்த்து விட்டு தூங்கலாம் என நினைத்தால் அது வேலையே செய்யவில்லை. பின்னர் விமான பணிப்பெண்களை கேட்டதற்கு அவர்கள் 10 நிமிட போராட்டத்திற்குப் பிறகு என்னை வேறு ஒரு இருக்கைக்கு மாற்றினார்கள்.

சில மணி நேரங்கள் தூங்கி எழுந்த பிறகு உணவு பரிமாறினார்கள். அந்த உணவு பாதிக்கு மேல் சரியாக சமைக்கப்படவில்லை, பழங்கள் அழுகிப்போய் கிடந்தன.என்னுடன் பயணித்த பலரும் உணவை திரும்ப கொடுத்துவிட்டனர் எனக் கூறியுள்ளார்.
சரி டிவியாவது பார்க்கலாமே என நினைத்தால் டிவி ஸ்க்ரீன் வேலை செய்யவில்லை. விமானம் கூட 25 நிமிடங்கள் தாமதமாகத்தான் புறப்பட்டது. இத்தனை பிரச்சனைகளையும் கடந்து நியூ ஜெர்சி இறங்கிய பிறகு பார்த்தால் என்னுடைய லக்கேஜ் பெட்டி உடைந்து போய் இருந்தது.
இப்படி மோசமான உணவு , வேலை செய்யாத இருக்கைகள், மோசமான சேவை என ஏர் இந்தியா விமானம் இப்படி ஒரு நிலைமைக்கு செல்லும் என நான் எதிர்பார்க்கவே இல்லை என கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது பலரும் ஏர் இந்தியா விமானத்தில் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை இந்த பதிவின் கீழ் பின்னூட்டங்களாக வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே ஏர் இந்தியா தரப்பில் இதற்கு மன்னிப்பு கோரப்பட்டு எக்ஸ் பக்கத்திலேயே பதில் வெளியிடப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications