இந்தியாவின் புகழ்பெற்ற விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தென்னிந்திய நகரங்களின் மீது கவனத்தை திருப்பியுள்ளது. அதாவது தென்னிந்திய நகரங்களிலிருந்து அதிக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியா பெங்களூரு அல்லது ஹைதராபாத்தில் தங்களது ஹப்-ஐ நிறுவ ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் ஏர் இந்தியா டெல்லியை மையமாக கொண்டு அதிக விமானங்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில் தென்னிந்தியாவிலும் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் ஏர் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஹைதராபாத் அல்லது பெங்களூருவை ஏர் இந்தியா தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி விமான நிலையத்தைப் பொறுத்தவரை ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே அங்கே அதிகமான விமானத்தை இயக்கி வருகிறது. அடுத்த கட்டமாக மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிறுவனமாக இருக்கிறது.
அங்கே கூடுதலாக தங்களுடைய விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்பு என்பது ஏர் இந்தியாவுக்கு மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு நகரில் தங்களுடைய விமான சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் ஏர் இந்தியாவின் இந்த திட்டத்தில் சென்னை விமான நிலையம் இடம்பெறவில்லை.
சென்னையை ஒப்பிடும்போது பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்து என்பது அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் ஏர் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதன் சர்வதேச வழித்தடங்களில் தான் இருக்கிறது. எனவே ஏர் இந்தியா நிறுவனமும் சர்வதேச வழித்தடங்களில் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் தான் ஆர்வமாக இருக்கிறது.
தற்போதைய சூழலில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு விமான நிலையங்களும் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. சென்னையை ஒப்பிடும்போது பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு விமான நிலையங்களின் உள்கட்ட அமைப்புகளும் சேவைகளும் சிறந்ததாக இருக்கின்றன. அதாவது பயணிகளுக்கான அனுபவம் அல்லது நேர மேலாண்மை உள்ளிட்டவை இந்த இரண்டு இடத்திலும் சிறப்பாக இருப்பதாக தெரிகிறது.
இரண்டு விமான நிலையங்களையும் விரிவு படுத்தக்கூடிய பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. எனவே இதன் மூலம் தங்களது விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதாக ஏர் இந்தியா எண்ணுகிறது. அதே போல நவி மும்பையில் அமைக்கப்பட்டு வரும் புதிய விமான நிலையத்திலும் கணிசமான இடத்தை பிடித்து கூடுதலாக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications