ஏர் இந்தியா நிறுவனம் தங்களுடைய வெளிநாட்டு சேவைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சொகுசு பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்காகவே தங்களுடைய விமானங்களில் மீண்டும் முதல் வகுப்பு இருக்கைகளை கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தின் ஏர்பஸ் (Airbus A350-1000 ) விமானங்களில் முதல் வகுப்பு சேவை கொண்டு வரப்பட இருக்கிறது என இதன் தலைவர் நிபுன் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவை பொருத்தவரை தற்போது 202 விமானங்களைக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் சேவை வழங்கி வருகிறது. இதில் 67 விமானங்கள் அகலமான உடல் அமைப்பை கொண்டவை ஆகும். இந்த நிலையில் தங்கள் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர இருக்கும் Airbus A350-1000 விமானங்களில் முதல் வகுப்பு இருக்கைகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன என தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் அதிகமாக பயணம் செய்யக்கூடிய லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் இந்த முதல் வகுப்பு இருக்கை சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தங்களிடம் பயன்பாட்டில் இருக்கும் விமானங்களிலும் இந்த முதல் வகுப்பு இருக்கைகளை கொண்டுவர முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஆடம்பர மற்றும் சொகுசு விமான பயணங்கள் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறும் ஏர் இந்தியா நிறுவனம் இந்த சந்தையை கைப்பற்ற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம் எனக் கூறியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான நிபுண் அகர்வால் முக்கியமான வழித்தடங்களில் முதல் வகுப்பு இருக்கைகள் கொண்டு வந்தால் தங்கள் நிறுவனத்தின் மீதான பிம்பத்தையே மாற்றி அமைக்கும் எனக் கூறியுள்ளார்.
நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் இந்த விமானங்களில் மிகவும் சௌகரியமான முறையில் பயணம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என ஏர் இந்தியா நிறுவனத்தின் நிபுண் அகர்வால் தெரிவித்துள்ளார்.
லண்டன் மற்றும் நியூயார்க் செல்லக்கூடிய விமானங்களில் முதல் வகுப்பு சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பணக்காரர்கள் தனி விமானம் மூலம் செல்வதை விடுத்து ஏர் இந்தியாவில் பயணிப்பார்கள் என கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications