சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை பெரும் போராட்டத்திற்கு பின்பு டாடா குழுமம் வாங்கிய பின்பு பல மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது வாடிக்கையாளர் சேவை முதல் விமான சேவை வரையில் அதிகளவிலான மேம்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமத்தில் இயங்கி வரும் 4 விமான சேவை நிறுவனங்களையும் இணைக்கும் முக்கியமான பணி தற்போது டாடா குழுமம் மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.
இதில் முக்கிய பகுதியாக ஏர் இந்தியா - விஸ்தாரா இணைப்பில் பெரும் பகுதி வகிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) அன்னிய செலாவணி முதலீட்டுக்கு வெள்ளிக்கிழமை மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. டாடா குழுமம் ஏர் இந்தியா வாங்கிய பின்பு ஏர் இந்தியா, ஏர் இந்திய எஸ்க்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா, விஸ்தாரா என 4 பிராண்டுகள் உள்ளது. இதில் விஸ்தாரா என்பது டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் இணைந்து உருவாக்கிய ஒரு நிறுவனம்.

சிங்கப்பூர் நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான விளங்கும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், விஸ்தாராவில் 49% பங்கு வைத்துள்ளது. 2022 நவம்பரில் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. டாடா குழுமம் விஸ்தாராவில் 51% பங்கு வைத்துள்ளது.
இணைப்பு நிறைவடைந்த பின்னர், சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியாவில் சுமார் 25.1% பங்கு வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் காரணத்தால் இந்த முதலீட்டுக்கு மத்திய அரசின் அனுமதி தேவை.
ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைப்பிற்குப் பல தரப்பட்ட ஒப்புதல்கள் இந்திய அரசு விதிமுறைகளுக்குக் கீழ் பெற வேண்டும், காரணம் டாடா-வுக்கு மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்கும் போதே சில முக்கியமான முறைகள் விதித்திருந்தது. இந்த விதிமுறைகளைத் தாண்டி வர்த்தக போட்டிதன்மை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) போன்ற பல அமைப்புகளின் அனுமதி பெற்று தற்போது FDI-க்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த வருடத்தின் இறுதிக்குள் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைந்து ஒரு முழு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனமாக உருவாகப்போகிறது.


Click it and Unblock the Notifications