ஈரானில் விலை வாசி உயர்வை கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் மூன்றாவது வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சிறிய அளவில் தொடங்கிய இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரிய அளவில் பரவி இருக்கிறது. பல இடங்களிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானில் நிகழ்ந்து வரும் இந்த போராட்டம் சர்வதேச அரசியல் சூழலையே மாற்றி அமைத்துள்ளது. அமெரிக்கா அரசாங்கம் ஏற்கனவே ஈரானுடன் மோதல் போக்கை கொண்டிருக்கிறது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். இந்த சூழலில் ரஷ்யா ஈரான் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தற்போது உலக நாடுகளில் ஈரான் விவகாரத்தில் ஈரானுக்கு எதிரானது , ஈரானுக்கு ஆதரவானது என இரண்டு துருவங்களாக பிரிந்து நிற்கின்றன. இருந்தாலும் ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அபாயம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த சூழலில் ஈரான் அரசு திடீரென தங்கள் நாட்டு வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ நிறுவனங்களின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
ஏர் இந்தியா , இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதில் ஈரான் நாட்டு அரசு தங்களுடைய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதித்து இருக்கிறது எனவே பயணிகளின் பாதுகாப்பை கருதி மாற்றுப் பாதைகளில் நாங்கள் விமானங்களை இயக்குகிறோம் என்பதால் சர்வதேச விமானங்கள் தாமதமாகும் என தெரிவித்துள்ளது. புறப்படுவதற்கு முன்பாக பயணிகள் தங்கள் விமானத்தின் ஸ்டேட்டஸை பார்த்துக்கொண்டு புறப்படுங்கள் என கூறி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்திலும் ஈரான் தன்னுடைய வான்வெளி பரப்பில் விமானங்கள் பறக்க 12 நாட்கள் தடை விதித்திருந்தது. ஏற்கனவே பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களும் ஈரான் வான்வெளியை பயன்படுத்துவதையே நிறுத்தி வைத்திருக்கின்றன. மேலும் மாற்று பாதைகளில் விமானங்களை இயக்கி வருகின்றன.
இதற்கிடையே மத்திய அரசு ஈரானில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேறுமாறு அறிவுரை வழங்கி இருக்கிறது. ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் வருவதும் போராட்டங்களை ஒடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளாலும் ஈரானில் பதற்றம் அதிகரித்து வருவதால் அங்கே வசிக்கக்கூடிய இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்றும் தேவை இல்லாமல் இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications