கேரள மாநிலத்துக்கு சொந்தமான முதல் விமான சேவை நிறுவனமான ஏர் கேரளா ஜூன் மாதத்தில் இருந்து சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதல் விமானம் இயக்கப்படும் என ஏர் கேரளா கூறியுள்ளது. கேரளாவுக்கு சொந்தமான முதல் விமான நிறுவனம் தான் ஏர் கேரளா.
2005 ஆம் ஆண்டு கேரள மாநில முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டியால் ஏர் கேரளா விமான திட்டம் கொண்டுவரப்பட்டது. வளைகுடா நாடுகளில் வாழக்கூடிய மலையாள மக்களின் கனவு திட்டமாக இது பார்க்கப்படுகிறது. முதலில் கேரள அரசு இந்த திட்டத்தை தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு ஆனால் அது நினைத்தபடி நடக்கவில்லை.

இந்த நிலையில் தான் கேரளாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடா நாடுகளில் தொழில் செய்து வரக்கூடிய தொழிலதிபர்கள் அஃபி அகமது மற்றும் அயூப் கல்லடா ஆகிய இருவரும் இதில் ஆர்வம் காட்டினர். இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதாக தீர்மானித்த அவர்கள் கொச்சியை தலைமை இடமாகக் கொண்டு ஏர் கேரளா என்ற நிறுவனத்தை உருவாக்கினர். இதற்கான இணையதளங்களை உருவாக்கினர், விமான பணியாளர்கள், விமானிகள் உள்ளிட்டவர்களை பணிக்கு அமர்த்தினர்.
பல முயற்சிகளுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதத்தில் தான் மத்திய சிவில் போக்குவரத்து துறை அமைச்சகம் ஏர் கேரளா விமான நிறுவனம் செயல்படுவதற்கு தடையில்லா சான்றிதழை வழங்கியது. இந்த நிலையில் ஏர் கேரளா நிறுவனம் 2025 ஜூன் மாதத்தில் இருந்து தன்னுடைய விமான சேவையை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடக்கத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என்றும் பின்னர் படிப்படியாக வளைகுடா நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்றும் ஏர் கேரளா நிறுவனம் கூறியுள்ளது.
முதன் முதலில் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தங்கள் நிறுவனத்தின் முதல் விமானம் இயக்கப்படும் என ஏர் கேரளா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக கண்ணூர் சர்வதேச விமான நிலைய நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தம் செய்திருப்பதாக ஏர் கேரளா நிறுவனம் கூறியுள்ளது.
கண்ணூரிலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் சென்று வரக்கூடிய இடங்களுக்கு முதல் கட்டமாக விமானம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இரட்டை என்ஜின் கொண்ட ஏடிஆர் ஏர்கிராஃப்ட் விமானங்களை பயன்படுத்த இருப்பதாகவும் பின்னர் தங்களுடைய செயல்பாடு அதிகரிக்க அதிகரிக்க விமானங்கள் மாற்றப்படும் என்றும் கூறியுள்ளது.
கேரள மக்கள் ஏராளமானோர் பணிக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர். எனவே அங்கிருந்து குறைந்த கட்டணத்தில் கேரளாவுக்கு நேரடி விமானம் இயக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications