டெல்லி: பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் கூடிய விரைவில் இந்தியாவில் 5000 ஊழியர்களை பணிக்கு எடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏர்பஸ் நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற ஒரு விமான தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக நேரடி ஊழியர்களாக 5000 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக கூறியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்பஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரான ரெமி மைலார்ட் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவலை வெளியிட்டார்.
டெல்லியில் ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய தலைமையகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய ரெமி மைலார்ட் இந்த தகவலை தெரிவித்தார். தற்போது இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனத்தில் 1500 பேர் நேரடி ஊழியர்களை பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். ஏர்பஸ் நிறுவனம் இந்தியாவில் தங்களின் ஆய்வு மற்றும் உற்பத்தி பணிகளை விரிவாக்கம் செய்ய இருக்கிறது.

இதற்காக இந்தியாவில் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க போவதாக கூறியுள்ளது. இதன்படி அடுத்த சில ஆண்டுகளில் கூடுதலாக 5,000 நேரடி ஊழியர்கள் ஏர்பஸ் நிறுவனத்திற்காக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டெல்லியில் இந்த நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைந்திருக்கும் நிலையில் புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்காகவே பெங்களூருவில் மிகப்பெரிய அளவில் ஏர் இந்தியா நிறுவனத்தோடு இணைந்து விமானிகளுக்கான பயிற்சி மையத்தை தொடங்க இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் ஏர்வேஸ் நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து ராணுவத்திற்கான ஹெலிகாப்டர்களையும் தயாரித்து வழங்க இருக்கிறது. அந்த வகையில் டாடா நிறுவனமும் ஏர்பஸும் இணைந்து சி 295 ராணுவ விமானம் மற்றும் ஹெச் 125 ஹெலிகாப்டரையும் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு வழங்குகிறது.
இதில் C295 விமானம் இந்தியாவிற்குள்ளேயே தனியாரால் தயாரிக்கப்படும் முதல் விமானமாக இருக்கும்.அதேபோல இந்தியாவிலேயே சுற்று சூழலுக்கு உகந்த விமான எரிபொருளை உற்பத்தி செய்யும் பொருட்டு இங்கே செயல்படக்கூடிய ஆய்வு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பாதுகாப்புத் துறையிலும் , வான்வழிப் போக்குவரத்து துறையிலும் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏர்பஸ் நிறுவனத்தின் வருகை இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதை மறுப்பதற்கு இல்லை.
Written by: Devika


Click it and Unblock the Notifications