இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஜெனரல் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளின்படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்யும்போது அவர்களது அருகில் பெற்றோர்களில் ஒருவர் அல்லது கார்டியனை உட்காருவதற்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பெரிய குழுக்களாக பிரயாணம் செய்யும்போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அருகில் அவர்களது பெற்றோர் அல்லது கார்டியன் ஒருவருக்கு சீட் ஒதுக்காதது பற்றிய புகார்கள் வந்ததை முன்னிட்டு இந்த உத்தரவை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

ஒரே பிஎன்ஆர் கொண்ட டிக்கெட்டில் பயணம் செய்யும்போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பக்கத்தில் அவர்களது பெற்றோர் அல்லது கார்டியனுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படுவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக பெரிய குழுவில் செல்லும்போது சிறு பிள்ளைகள் பக்கத்தில் அவர்களது பெற்றோரையோ அல்லது கார்டியனையோ உட்காருவதற்கு தானாகவே சீட் ஒதுக்கப்படுவதில்லை.
இதனால் குழந்தைகள் தனியாக வேறு இடத்தில் பயணம் செய்வதால் பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாக நேர்ந்தது. குழந்தைகளிடம் சக பயணிகள் தவறுதலாக நடந்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.
இந்த சம்பவங்கள் அதிகரித்ததால் பெற்றோர் கலக்கமடைந்து அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் இதைப் பற்றி சில விமான நிறுவன அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு இது தொடர்பாக பல பெற்றோர் புகார் செய்தனர்.
இதன் அடிப்படையில் இயக்குநரகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் நன்மை தருகிறது.
அத்துடன் ஜீரோ பேக்கேஜ், விருப்பமான சீட் தேர்வு, உணவு, சிற்றுண்டிகள், பானங்கள், இசைக்கருவிகளைக் கொண்டு செல்லுதல் போன்ற சேவைகளுக்குக் கூடுதல் கட்டணத்தை விமான நிறுவனங்கள் விதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் இதை தாமே முன்வந்து செலுத்த வேண்டும்.
சீட் ஒதுக்கீடுக்குத் தனியாக கட்டணம் செலுத்தாத குழுப் பயணிகள் தனித்தனியாகப் பிரிக்கப்படுவது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.
இந்த புதிய நடைமுறையின்படி பெரிய குழுவினருடன் செல்லும் குழந்தைகள் தங்களது பெற்றோருடன் அமர்ந்து செல்வதற்கு வசதி கிடைத்துள்ளது. பெற்றோர் தேவையின்றி கூடுதல் கட்டணத்தை செலுத்துவதையும் தவிர்த்துள்ளது. இந்த உத்தரவை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications