இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பொதுமக்களின் நலன் கருதி தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை பிரிவில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தான் முன்னணி நிறுவனங்களாக இருக்கின்றன. இந்தியாவில் தொலைபேசி வாயிலாக மக்களிடம் நிதி மோசடிகள் நடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. சைபர் கிரைம்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில் இதுபோன்ற தொலைதொடர்பு சேவை வழியாக நடைபெறும் மோசடிகளை தடுத்து மக்களை பாதுகாப்பதற்காக ஏர்டெல் நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல், இது தொடர்பாக ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களை தொடர்பு கொண்டு மூன்று நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இதனை ஏர்டெல் நிறுவனம் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடமும் தெரிவித்துள்ளது.
டிராய்க்கு ஏர்டெல் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் மட்டும் 1.7 மில்லியன் சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த மூன்று காலாண்டுகளில் மட்டும் மக்கள் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. போலியான லிங்குகளை அனுப்புவது , டிஜிட்டல் அரஸ்ட் செய்வது ,போலியான கடன் சலுகைகளை வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு சைபர் கிரைம் மோசடிகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்கான சில நடவடிக்கைகளை ஏர்டெல் முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே ஏர்டெல் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவிலேயே தற்போது பாதுகாப்பான நெட்வொர்க் ஏர்டெல் என மெசேஜ் மூலம் தகவல் அனுப்பி வருகிறது. தங்கள் நிறுவனம் fraud detection என்ற ஒரு புதிய தீர்வினை கொண்டு வந்திருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரக்கூடிய ஃபோன் கால் அல்லது மெசேஜ்கள் போலியானவையா என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான தொழில்நுட்பங்களை மேம்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பலருக்கும் அவர்களுக்கு வரக்கூடிய மெசேஜ் மற்றும் ஃபோன் கால்களில் ஏர்டெல் நிறுவனமே ஸ்பேம் அலர்ட் என்ற ஒரு எச்சரிக்கையையும் விடுக்கிறது. இருந்தாலும் இந்த துறை சார்ந்த இயங்க கூடிய அனைத்து நிறுவனங்களும் கூட்டாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என கூறியுள்ள ஏர்டெல் இதற்காக ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது.
அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மோசடி அழைப்புகளை கண்டறிவது, பாதுகாப்பது மற்றும் நிகல் நேர மோசடி தகவல்களை பகிர்ந்து கொள்வது மூலம் மக்கள் இது போன்ற மோசடிகளில் சிக்குவதை முதல் படியிலேயே தடுத்துவிட முடியும் என தெரிவித்திருக்கிறது. மூன்று தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் போது பெரிய அளவிலான ஒரு மாற்றம் ஏற்படும் என ஏர்டெல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
3 நெட்வொர்குகளும் இணைந்து செயல்படக்கூடிய வகையிலான ஒரு தரவு பகிர்வு தளத்தை உருவாக்குவதன் மூலம் இது சாத்தியமாகும். ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்தால் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications