இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது கிளை நிறுவனமான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி-யை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் இந்திய வங்கித்துறை வேகமாக வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டு இருக்கும் இதேவேளையில், உலக நாடுகள் பெருமளவில் ரெசிஷனுக்குள் நுழையும் எனக் கணிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்தியா நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி போன்ற நிறுவனம் ஐபிஓ வெளியிடும் போது கட்டாயம் ஜாக்பாட் ஆக இருக்கும் என்பதால், ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி-யை ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளார்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ஏற்கனவே லாபகரமான நிறுவனமாக மாறியுள்ளது மற்றும் ஆரோக்கியமான இரட்டை இலக்க அளவில் வளர்ந்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி அதன் டேட்டா சென்டர் வணிகமும் விரைவில் பணமாக்கும் நிலையில் இருக்கும் காரணத்தால் இந்நிறுவனத்தின் ஐபிஓ மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
5ஜி சேவை
ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவைகளுக்கான ப்ரீமியம் விலையை நிர்ணயம் செய்ய விரும்பவில்லை எனவும், தற்போது வேகமாக விரிவாக்கம் செய்யும் பணியில் மட்டுமே அதிகக் கவனத்தையும் செலுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ஏர்டெல் நிறுவனத்திற்குத் தற்போது, அடுத்த தலைமுறை சேவைக்கும் 700 MHz பேண்ட் அலைக்கற்றைத் தேவையில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
12 சதவீத மட்டுமே
இந்தியாவில் தற்போது மொத்த ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் வெறும் 12 சதவீத கருவிகள் மட்டுமே 5ஜி சேவையை ஏற்கும் திறன் கொண்டு உள்ளது. இந்த நிலையில் கேப்டிவ் நெட்வொர்க்குகளில் இருந்து குறிப்பிடத்தக்க வருவாய் பெறும் வாய்ப்புகளும் தொலைவில் தான் உள்ளது.
பேஸ் ரேட் உயர்வு
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் இரண்டு முக்கிய வர்த்தக வட்டத்தில் தனது சேவை கட்டணத்தின் பேஸ் ரேட்-ஐ அதிகரித்தது. இது வருவாய் அதிகரிப்பு மற்றும் வர்த்தகத் தக்கவைத்தல் பிரிவிலும் பெரிய அளவில் பலன் அளித்த நிலையில் இதைப் பிற வட்டங்களில் செய்ய வேண்டுமா என்ற முடிவை அடுத்த 6 வாரத்தில் எடுக்க உள்ளது ஏர்டெல்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி வருவாய்
ஜனவரி 2017 இல் தொடங்கப்பட்ட ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி தற்போது இந்தப் பிளாட்பார்மில் சுமார் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான மொத்த வணிக மதிப்பு (GMV), ஆண்டு வருமானமாகச் சுமார் 1,000 கோடி ரூபாய். இந்த நிலையில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி-யில் ஏர்டெல் நிறுவனம் 70% பங்குகளையும், பார்தி எண்டர்பிரைசஸ் மீதமுள்ள பங்குகளை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications