இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு சேவை நிறுவனமாக செயல்படும் ஏர்டெல் நிறுவனம் அண்மையில் வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற, அதிவேக இணைய வசதியை வழங்கும் நோக்கில், '5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங்' (5g network slicing) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு' (priority postpaid) சேவையை அறிமுகப்படுத்தியது.
ஏர்டெல் வாடிக்கையாளா்கள், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலோ அல்லது Network Congestion நேரங்களில் சிக்கினாலும் கூட போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு முன்னுரிமை (Priority) அளிக்கப்பட்டு, அதிவேக 5G இணையம் தடையின்றி கிடைக்கும் என ஏர்டெல் அறிவித்தது. அதாவது ஒரு பெரிய நெட்வொர்க் பாதையை சிறு சிறு பிரிவுகளாக (Slices) பிரித்து, இதில் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கான பாதை தனியாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு 'Fast Lane' மூலம் இணையம் தடையின்றி வழங்கப்படும்.ஆனால் இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆகியவற்றிடம் இது குறித்து விளக்கம் கேட்டது. இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி (Net Neutrality) என்பது பின்பற்றப்படுகிறது. அதாவது இணையத்தில் அனைவருக்கும் சமமான வேகம் மற்றும் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதுதான் இதன் விதி. ஆனால் அதிகப் பணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு மட்டும் கூடுதல் வேகம் கொடுத்தால், குறைந்த கட்டணம் செலுத்தும் கோடிக்கணக்கான ப்ரீபெய்ட் பயனர்களின் இணைய வேகம் பாதிக்கப்படலாம்.
இதற்கிடையே வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் சமூக வலைத்தளங்களில் ஏர்டெல்லை மறைமுகமாகச் சாடி, "எங்கள் நெட்வொர்க்கில் அனைவருக்கும் சமமான முன்னுரிமை உண்டு" என விளம்பரம் செய்யத் தொடங்கியது. வாடிக்கையாளர் மத்தியில் எழுந்த எதிர்ப்பு போட்டி நிறுவனங்களின் விளம்பரம் ஆகியவற்றை தொடர்ந்தும், நெட் நியூட்ராலிட்டி புகார்களுக்கு பதில் கொடுக்கும் வகையிலும் ஏர்டெல் தனது இணையதளத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
இதன்படி "Priority" (முன்னுரிமை) என்ற வார்த்தைக்குப் பதிலாக "Fast Lane Technology" என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. மேலும் "நெட்வொர்க் நெரிசலின் போது முன்னுரிமை அணுகல் வழங்கப்படும்" என்ற வரிகளைத் தனது விதிமுறைகளில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் 5G ஸ்லைசிங் தொழில்நுட்பத்தால் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் இணைய வேகம் எந்த வகையிலும் குறையாது. இதற்கான தரவுகளை (Data) நாங்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) சமர்ப்பித்துள்ளோம் என ஏர்டெல் விளக்கம் தந்துள்ளது.
நெட் நியூட்ராலிட்டி விதிகளுக்கு அச்சமடைந்து "போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு மட்டும் முன்னுரிமை" என்ற விளம்பர வாசகங்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக "Fast Lane 5G தொழில்நுட்பம்" என்று ஏர்டெல் தனது சேவையை மறுபெயரிட்டுள்ளது. ஆனால் போஸ்ட்பெய்ட் , ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான பாகுபாடு தொடர்கிறது என்றே வாடிக்கையாளர்கள் சாடுகின்றனர்.


Click it and Unblock the Notifications

