டெல்லி: இது இந்திய டெலிகாம் துறைக்கு பொற்காலம். ஆனால் டெலிகாம் நிறுவனங்களுக்கு போறாத காலம். இன்று இந்தியாவில், அமேசான் ப்ரைம், நெஃப்ளிக்ஸ், ஜி5, டிக் டாக், பப்ஜி, ஸ்விக்கி, சொமாட்டோ என பல ஆன்லைன் நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை சிறப்பாக செய்ய முடிகிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம்... இணையம் தான்.
இந்தியாவில் இணையத்தை சகாய விலைக்கு கிடைக்க சகாயம் செய்தது ஜியோ தான். என்றாலும், அந்த விலைப் போட்டியால் ஏர்டெல், வொடாபோன் , ஐடியா, பி எஸ் என் எல் என எல்லா டெலிகாம் நிறுவனங்களுமே ஸ்தம்பித்துவிட்டதை நாம் கண் கூடாகப் பார்த்து வருகிறோம்.
ஜியோவின் அதிரடி எண்ட்ரி, தொடர்ந்து ரீசார்ஜ் பேக்குகளின் அதிரடி விலை குறைப்பு, ரிங்கிங் டைம் பிரச்சனை, ஐயூசி கட்டண பஞ்சாயத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு என எல்லாம் சேர்த்து டெலிகாம் துறையை கடுமையான நஷ்டத்தில் தள்ளி இருக்கிறது. எவ்வளவு நஷ்டம் தெரியுமா..? செப்டம்பர் 2019 காலாண்டில் ஏர்டெல் 23,000 கோடி ரூபாய், வொடாபோன் ஐடியா 50,000 கோடி ரூபாய் நஷ்டம் என கணக்கு காட்டினார்கள்.
ஜியோ வருவதற்கு முன் ஓரளவுக்காவது லாபத்தில் இயங்கிக் கொண்டு இருந்த டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் ஓவர் நைட்டில் நடுத் தெருவுக்கு வந்துவிட்டன. அதற்கு ஆதாரமாக, வாடிக்கையாளர்கள் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது டிராய்.
வொடாபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களில் இருந்து சுமாராக 49 லட்சம் வாடிக்கையாளர்கள், கடந்த செப்டம்பர் 2019-ல் வெளியேறி இருக்கிறார்களாம்.
வொடாபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து செப்டம்பர் 2019 கணக்குப் படி 25.7 லட்சம் வாடிக்கையாளர்கள் விலகி இருக்கிறார்களாம். ஆக மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 27.24 கோடியாக இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 23.8 லட்சம் பேர் வெளியேறி இருக்கிறார்கள். எனவே ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த கஸ்டமர் எண்ணிக்கை 32.55 கோடியாக இருக்கிறது.
இதற்கு அப்படியே நேர் மாறாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 69.83 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் அதே செப்டம்பர் 2019-ல் புதிதாக இணைந்து இருக்கிறார்களாம். ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35.52 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
இப்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நிறுவனங்களில் பட்டியலில் முறையே வொடாபோன் ஐடியா, ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து இருக்கிறார்கள்.
இந்த செய்தியைக் கேட்கும் போது ஜியோவுக்கு தென்றல் வந்து வீசத் தானே செய்யும்..? ஏர்டெல் மற்றும் வொடாபோன ஐடியாவுக்கு எரிமலை வெடிக்கத் தானே செய்யும்..? இனியும் என்ன எல்லாம் நடக்கப் போகிறதோ தெரியவில்லை.