கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் தொடங்கப்பட்ட புதிய விமான நிறுவனமான ஏர் ஆகாசா நிறுவனம் தற்போது புதுப்புது விமானங்களை இயக்கி வருகிறது என்பது தெரிந்ததே.
மேலும் இந்த விமான நிறுவனம் குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு பல நல்ல வசதிகளை செய்து வருவதால் குறுகிய காலத்தில் பயணிகள் மத்தியில் பிரபலமாகி விட்டது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சலுகையாக செல்லப்பிராணிகளையும் விமானத்தில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் ஆகாசா விமானம்
பல விமான நிறுவனங்கள் செல்லப்பிராணிகளை அனுமதிப்பதில்லை என்பதால் பணக்காரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடன் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏர் ஆகாசா விமான நிறுவனம் வரும் நவம்பர் மாதம் முதல் செல்லப்பிராணிகளை சரக்கு கேபினில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்லப்பிராணிகளுக்கு அனுமதி
இதுகுறித்து ஏர் ஆகாசா விமான அதிகாரி ஒருவர் கூறியபோது, 'வரும் நவம்பர் மாதம் முதல் வளர்ப்பு நாய்கள், பூனைகள் ஆகியவை எங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம் என்றும் இது தொடர்பான முன்பதிவுகள் அக்டோபர் 15 முதல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூண்டில் செல்லப்பிராணிகள்
மேலும் ஒவ்வொரு செல்ல பிராணிகளும் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் கூண்டில் அடைக்கப்பட்ட செல்லப்பிராணியின் எடை உள்பட ஒருசில சோதனை செய்யப்படும் என்றும் 32 கிலோ வரையிலான செல்லப்பிராணிகள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
கொள்கை
மேலும் செல்லப்பிராணிகள் பயணம் செய்வதற்கான கொள்கை விரைவில் மேம்படுத்தப்படும் என்றும் செல்லப்பிராணிகளை அனுமதிக்க வேண்டும் என பல பயணிகள் கேட்டுக் கொண்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் இதனால் எங்கள் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம்
மேலும் செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்லும் முன் அதன் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியால் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் ஆகாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications