இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடுகளில் தற்போது மொத்த அம்பானி குடும்பத்தினர் மும்முரமாக இருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் ஜாம்நகரில் மிகவும் ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து, மே மாத இறுதியில் சொகுசு கப்பலில் நடைபெற்ற மற்றொரு விழா என ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக இருப்பதைக் கண்டு உலகமே வியந்து வருகிறது.

முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும் கல்யாண வேலைகளைக் கவனித்து வரும் வேளையில் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் மகள் ஈஷா அம்பானி மொத்த வர்த்தகத்தையும் கவனித்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக இருக்கும் 9.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும், முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி உள்ளிட்ட அம்பானி குடும்பத்தினர் தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஈர்ப்புக்கு பெயர் பெற்றவர்கள்.
அம்பானி குடும்பம் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த வீடான அன்டாலியாவில் வசித்து வருகின்றனர். ₹15,000 கோடி மதிப்புள்ள இந்த வீட்டைத் தவிர, நாட்டின் மிகவும் விலை உயர்ந்த கார்களைக் கொண்ட கார் கலெக்ஷன்களையும் அம்பானி குடும்பத்தினர் வைத்துள்ளனர்.
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் கலெக்ஷன்களை அவர்கள் வைத்திருப்பதாகக் கூறப்படும் வேளையில், முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி, விலை உயர்ந்த கார்களை அவ்வப்போது மும்பையில் ஓட்டிக் கொண்டிருப்பதைக் காண முடியும்.
இந்நிலையில், ஆகாஷ் அம்பானி சமீபத்தில் அரிய வகையைச் சேர்ந்த 10.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி காரை ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவில் குறிப்பிடத்தக்க விதமாக, சீட் பெல்ட் அணியாமல் சென்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அரிய மற்றும் காஸ்ட்லியான கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஆகாஷ் அம்பானி, மும்பையில் தான் பிரத்தியேகமாக ஆர்டர் செய்யப்பட்ட ஃபெராரி புரோசாங்கே எஸ்யூவி (Ferrari Purosangue SUV) காரை ஓட்டிச் செல்லும் வீடியோ சமீபத்தில் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஃபெராரி புரோசாங்கே எஸ்யூவி கார் இந்திய சாலைகளில் அரிதாகவே காணப்படுகிறது. இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த கார்கள் உள்ளன.
'மாடர்ன் கார் ஸ்பாட்டர்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், பெரிய பாதுகாப்புப் படையுடன் மும்பை சாலையில் ஆகாஷ் அம்பானி Ferrari Purosangue SUV காரை ஓட்டி செல்லும் காட்சி இதில் இருந்தது. இதில் தான் ஆகாஷ் அம்பானி சீட் பெல்ட் இல்லாமல் கார் ஓட்டிய காட்சி இருந்தது.
இதை கண்டு பல நெட்டிசன்கள் ஆகாஷ் அம்பானியைக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.


Click it and Unblock the Notifications