இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தையில் உணவு டெலிவரி பிரிவில் கிங் மேக்கராகவும், குவிக் காமர்ஸ் துறையில் கடுமையாகப் போட்டிப்போட்டுத் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கும் சோமேட்டோ-வின் இணை நிறுவனரான அக்ருதி சோப்ரா, இந்நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
இவர் சோமேட்டோ நிறுவனத்தை விட்டு உடனடியாக வெளியேறுகிறார் என்பது தான் கூடுதல் அதிர்ச்சி செய்தி. இன்று காலையில் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அவர் செப்டம்பர் 27, 2024 தேதியே உடனடியாக பதவி விலகியுள்ளார். தற்போது நிறுவனத்தை விட்டு வெளியேறி புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளார்.

அக்ருதி சோப்ரா 2011 நவம்பர் மாதம் முதல் சோமேட்டோவில் பணியாற்றி வருகிறார். முதலில் அவர் நிதி மற்றும் செயல்பாடுகளின் மூத்த மேலாளராக தனது பணியைத் தொடங்கினார். இவரது பணி திறன் காரணமாக படிப்படியாகப் பதவியில் உயர்ந்து, கூடுதல் பொறுப்புகளைப் பெற்று, அவர் நிதி மற்றும் செயல்பாடுகளின் துணைத் தலைவர் மற்றும் CFO உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார்.
இதை தொடர்ந்து 2020 அக்டோபர் மாதம் சோமேட்டோவின் ஊழியர்கள் வளர்ச்சி பிரிவின் தலைமை பதவிக்கு உயர்த்தப்பட்டார், இதன் பின்னர் 2021 ஜூன் மாதத்தில் தலைமை மக்கள் அதிகாரியாக (CPO) ஆனார். இறுதியாக ஐபிஓ-வுக்கு முன்பு இணை நிறுவனராக நியமிக்கப்பட்டார் அக்ருதி சோப்ரா.
அக்ருதி சோப்ரா சோமேட்டோ நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, அவர் மூன்று ஆண்டுகள் PwC நிறுவனத்தில் வரி மற்றும் ஒழுங்குமுறை பிரிவில் பணியாற்றினார். தீபேந்தர் கோயல் தலைமையிலான சோமேட்டோ நிறுவனம், அக்ருதி சோப்ரா ராஜினாமா குறித்து பங்குச்சந்தையில் முறையாக அறிக்கையைச் சமர்ப்பித்து முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications