ஹாலிவுட் நடிகர்களாக இருந்தாலும் சரி அல்லது பாலிவுட் பிரபலங்களாக இருந்தாலும் சரி விவாகரத்து செய்தி என்று வரும்போது மக்களின் கவனம் என்னவோ.. அவர்கள் பிரிவதை நோக்கி மட்டும் அல்லாமல் விவரத்திற்கு பிறகு எவ்வளவு தொகை ஜீவனாம்சமாக கொடுக்கப்படுகிறது என்பதிலும் இருக்கும். விவாகரத்துக்கு பின் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? நீதிமன்றங்கள் இதை எப்படி தீர்மானிக்கின்றன? என்பதுதான் இன்று பலருக்கும் இருக்கும் குழப்பம்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா ஆகியோர் மும்பையில் உள்ள ஒரு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். இந்த தீர்ப்பின் ஒரு பகுதியாக சாஹல் தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடியை ஜீவனாம்சமாக வழங்கவுள்ளார்.

ஜீவனாம்சம் எப்படி கணக்கிடப்படுகிறது?: இந்தியாவில் ஜீவனாம்சம் கணக்கிடப்படுவதற்கு எந்த ஒரு ஃபார்முலாவும் இல்லை. நீதிமன்றங்கள் இருவரின் நிதிநிலை, அவர்களுடைய வருவாய் திறன் மற்றும் திருமணத்திற்கு அவர்கள் அளித்த பங்களிப்புகள் போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டுதான் இந்தத் தொகையை வழங்க அனுமதிக்கின்றன.
உதாரணமாக 20 ஆண்டுகளாக இல்லத்தரசியாக இருந்த நித்யா என்ற பெண் தனது பணக்கார தொழிலதிபர் கணவரான ராஜேஷ்-ஐ விவாகரத்து செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நீதிமன்றம் நித்யாவுக்கு வருமானம் இல்லாததையும் ராஜேஷின் வருவாயையும் கருத்தில் கொள்ளும். கல்வித் தகுதி இருந்தபோதிலும் நித்யா தனது கணவரின் தொழில், அவருடைய குடும்பம் மற்றும் அவர்களின் குழந்தைகளை பேணி காப்பதற்காகவே தனது வாழ்க்கையை தியாகம் செய்ததை நீதிமன்றம் அங்கீகரிக்கும்.
ஜீவனாம்சம் வழங்குவதற்கு முன்பு நீதிமன்றம் மனைவி மற்றும் மனைவியை சார்ந்திருக்கும் குழந்தைகளின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முடிவெடுக்கும். அப்போது இரு தரப்பினரின் வேலை வாய்ப்பு நிலை, தகுதி, விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் சொத்துக்கள், திருமணத்தின் போது அவர்களுடைய வாழ்க்கை தரம் எப்படி இருந்தது? குடும்ப பொறுப்புகளுக்காக யார் எவ்வளவு தியாகம் செய்தனர்? வேலை செய்யாத வாழ்க்கை துணைக்கு சட்ட செலவுகள் என்னென்ன? கணவரின் வருமானம் மற்றும் பொறுப்புகள் என்னென்ன? என அனைத்தையும் பார்த்து தான் ஜீவனாம்சம் தீர்மானிக்கப்படும்.
உதாரணமாக கணவன் மற்றும் மனைவி இருவருமே மாதம் ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இருவருக்கும் ஒரே மாதிரியான நிதிநிலை இருந்தால் ஜீவனாம்சம் தேவையில்லை. இருப்பினும் ஒரு துணைக்கு குழந்தைகளை பராமரிப்பது போன்ற அதிக நிதிச் சுமை இருந்தால் நீதிமன்றம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம்.
ஆண்களும் ஜீவனாம்சம் பெற முடியுமா?: ஜீவனாம்சம் பெரும்பாலும் கணவன் மனைவிக்கு தருவது என்று தான் நாம் நினைப்போம். ஆனால் இந்திய சட்டத்தில் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் ஆண்களும் ஜீவனாம்சம் கோர முடியும்.1955-ஆம் ஆண்டு இந்து திருமண சட்டத்தின் கீழ் 24 மற்றும் 25 பிரிவுகளில் கணவரும் ஜீவனாம்சம் கோரலாம். இந்த பிரிவு குறிப்பாக பாலின பாகுபாடு இல்லாமல் இருவருக்கும் சமமான உரிமை கிடைக்கச் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது சில சூழ்நிலைகளில் மனைவி கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
எப்போது ஆண்கள் ஜீவனாம்சம் கோரலாம்?: கணவர் உடல் ஊனமுற்றவராக அல்லது வேறு காரணங்களால் வருமானம் ஈட்ட முடியாதவராக இருந்தால் ஜீவனாம்சம் கோர முடியும். அதே நேரம் மனைவியை பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் கணவரும் ஜீவனாம்சம் பெற முடியும். அதற்கு நீதிமன்றத்தில் மனைவியிடம் தான் பொருளாதார ரீதியாக சார்ந்து இருப்பதை கணவர் நிரூபிக்க வேண்டும்.
ஜீவனாம்சம் வழங்குவது கட்டாயமா? ஜீவனாம்சம் வழங்குவது என்பது கட்டாயம் கிடையாது. ஆனால் நீதிமன்றத்திற்கு உங்கள் வழக்கு எடுத்துச் செல்லப்பட்டால்.. அவர்கள் இரு தரப்பினரின் விவரங்களையும் கேட்டு முடிவு எடுப்பார்கள்.


Click it and Unblock the Notifications