இந்திய பங்குச் சந்தையில் நவம்பர் 21ஆம் தேதி வியாழக்கிழமை அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தை கண்காணிப்பாளர் அமைப்பான SEC, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் அசூர் பவர் குளோபல் நிறுவனத்தின் நிர்வாகி சிரில் கபனஸ் ஆகியோர் மீது பங்குச்சந்தை மோசடி, பங்குச்சந்தை மோசடி சதி மற்றும் வயர் மோசடி சதி குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதி துறை, FBI சுமத்தி வழக்குத் தொடுத்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் அதானி குழுமத்தின் மீது அமெரிக்கப் பங்குச் சந்தை கண்காணிப்புக் குழு (SEC) சிவில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியூயார்க் நீதிமன்றம் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் மீது நவம்பர் 20ஆம் தேதி (இந்திய நேரத்தில் இரவு) வழக்கு தொடுத்த நிலையில், அதை சுடச்சுட ஹிண்டன்பெர்க் ரிசர்ச் தனது டிவிட்டரில் பதிவிட்டதன் மூலம் இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

இதன் எதிரொலியாக இன்று காலை முதல் அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதன் முதலீட்டாளர்கள் பெருமளவிலான தொகையை இழந்துள்ளனர். சில பங்குகள் 20% வரை வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை 16% வீழ்ச்சியடைந்து 1,185.90 ரூபாயாக குறைந்தது.
அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் 10% வீழ்ச்சியடைந்து 2,538.20 ரூபாயாகக் குறைந்தது.
SEC-யின் இந்த குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது, ஏற்கனவே அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பெர்க் ரிசர்வ் வைத்த குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் செபி விசாரணை செய்து வருகிறது. ஆனால் செபி தலைவரே இந்த மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் ரிசர்ச் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது இந்த விசாரணையின் நிலை என்னவென்று தெரியாமல் நிற்கிறது.
பல பிரச்சனைகளில் அதானி குழுமம் சிக்கியிருக்கும் வேளையில் முதலீட்டாளர்கள் இந்த விவகாரத்தைக் கவனமாகக் கண்காணித்து வருகின்றனர். அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இன்று அதானி குழுமத்தின் பங்குகளின் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் - 20.86 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் & SEZ - 17.01 சதவீதம் சரிவு
அதானி பவர் - 11.03 சதவீதம் சரிவு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 19.12 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 17.38 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 12.71 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 9.35 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 8.88 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 10.49 சதவீதம் சரிவு
NDTV - 8.39 சதவீதம் சரிவு
சங்கி இண்டஸ்ட்ரீஸ் - 7.30 சதவீதம் சரிவு


Click it and Unblock the Notifications