டெல்லி: இந்தியாவில் தற்போது முதலீடுகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது. ஆனால் அப்படி இருந்தும் கிட்டத்தட்ட 1.91 லட்சம் கோடி ரூபாய் யாராலும் கோரப்படாமல் பங்குகள், டெபாசிட்டுகள், காப்பீடுகள் என பல வகைகளில் தேங்கி இருக்கிறது.
போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம். உரிய நபர்களுக்கு சென்று சேர வேண்டிய பணம் யாருக்கும் கிடைக்காமல் தேக்கமடைந்துள்ளது. போதிய தகவல் தொடர்பு இல்லாதது இதற்கு மற்றொரு காரணம்.

முதலீடு செய்யும் நிறுவனங்களிடம் நமது நாமினி, முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் ஆகியவற்றை முறையாக தெரிவிப்பது அவசியம். இல்லையெனில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இது போல முறையான பணம் நம்மை வந்து சேரமால் போகிறது.
செயல்படாத வங்கி கணக்குகள் மற்றும் செயல்படாத டிமேட் கணக்குகள், குறிப்பாக முதலீட்டாளரின் இறப்பு ஆகியவற்றையும் காரணமாக கூறலாம். முதலீடு செய்திருப்பார்கள் அது குறித்து தங்கள் வாரிசுகளிடம் தெரிவிக்காமல் திடீரென இறந்து போகும் போதும் இந்த சிக்கல் உருவாகிறது.
இதுபோல பல கோடி ரூபாய் யாராலும் கோரப்படாமல் இருப்பது இந்திய நிதி அமைப்புக்கு பெரிய சவாலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏனெனில் உரிய நபருக்கு சென்று சேர வேண்டிய பணம் சேராமல் ஓரிடத்திலேயே தேக்கமடைந்துவிடுகிறது.
முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரத்தின்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் யாராலும் உரிமை கோரப்படாமல் உள்ளது. இதுபோல மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டும் 35,000 கோடி ரூபாய் யாராலும் கோரப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் தாங்கள் செய்த சிறிய முதலீடுகளை மறந்து விடுவது அல்லது எஸ்ஐபி உள்ளிட்ட முதலீடுகளை தொடங்கிவிட்டு பாதியிலேயே நிறுத்துவது அல்லது நாமினி விவரங்களை அப்டேட் செய்யாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மியூச்சுவல் ஃபண்டுகள் சரியான நபர்களை சென்று சேர்வதில்லை.
காப்பீட்டு துறையிலும் இதுபோல பல மடங்கு தொகை தேக்கம் அடைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட 21,500 கோடி ரூபாய் பணம் உரிய வாரிசுதாரர்களால் இதுவரை கோரப்படவில்லை.
காப்பீட்டு தொகையை கேட்டு பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதது அல்லது பாலிசி ஆவணங்களை தொலைத்தது ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
epfoவில் 48,000 கோடி ரூபாய் யாராலும் கோரப்படாமல் இருக்கிறது. வாரிசுதாரர்கள் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அவற்றை கோராமல் விடுவதே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படாமல் இருக்கக்கூடிய வங்கி கணக்குகள் மற்றும் டெபாசிட்டுகள் செயல்படாத கணக்குகளாக அறிவிக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் இதுபோன்ற செயல்படாத கணக்குகளில் மொத்தம் 62 ஆயிரம் கோடி ரூபாய் தேக்கமடைந்து இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒருவர் முதலீடு செய்யும் போது அது தொடர்பான தகவல்களையும் அதில் கிடைக்கக்கூடிய பலன்களையும் தங்களது வாரிசுதாரர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும், அதேபோல திடீரென ஒருவர் இறந்துவிடும் பட்சத்தில் அவர் பெயரில் இருக்கக்கூடிய வீடு வாகனம் உள்ளிட்ட சொத்துக்கள் மட்டுமல்லாமல் அவர் வேறு ஏதேனும் முதலீடு செய்திருக்கிறாரா என்பன போன்ற தகவல்களையும் வாரிசுதாரர்கள் தேடி தெரிந்து கொண்டு அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை முறைப்படி விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் IEPF இணையதளம் இந்த பிரச்னைக்கான தீர்வினை வழங்குகிறது. உங்கள் பணம் எங்கே தேக்கமடைந்துள்ளது, அதனை எப்படி கோர வேண்டும், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பன உள்ளிட்ட தகவல்களை நீங்கள் எளிதில் பெறலாம். பல்வேறு தனியார் இணையதளங்களும் கூட, கோரப்படாத பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், டெபாசிட்டுகளை சட்டப்பூர்வமாக போராடி பெற்று தருகின்றன.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications