கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்தன. தொற்று முடிவடைந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டுமென நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் இதற்கு பெரும்பாலான ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசானுக்கு இதுபெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு கிட்டத்தட்ட 30,000 ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமேசான் தலைமைக்கு கூட்டாக மனு ஒன்றை அளித்தனர். ஆனால் அமேசான் நிறுவனம் அதனை ஏற்க மறுத்து விட்டது. ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என கூறியது. இதனை ஏற்க மறுத்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்காமல் தவிர்த்தது.

இந்த நிலையில் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய விரும்பாத ஊழியர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தினமும் அலுவலகத்திற்கு வருவது காஃபி குடிப்பது, சிறிது நேரம் அரட்டை அடிப்பது பின்னர் வீடு திரும்புவது என இருந்துள்ளனர். இதனால் இதனை கண்டறிந்துள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகம் தற்போது பல்வேறு புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
அமேசான் நிறுவனத்தில் ஒரு ஊழியர் நிறுவனத்தில் இத்தனை மணி நேரம் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற எந்த ஒரு விதிமுறையும் அமலில் இருந்தது கிடையாது. ஆனால் தற்போது அந்த விதியை அமேசான் நிறுவனம் மாற்றி உள்ளது. இதன் படி ரீடெய்ல் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் கட்டாயம் இரண்டு மணி நேரம் அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்தாக வேண்டும், மற்ற பிரிவினை சேர்ந்த ஊழியர்கள் கட்டாயம் ஆறு மணி நேரம் அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்தாக வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுபோல பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் அலுவலகத்திற்கு வந்து பணி புரிவது விரும்பாமல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு வெறுமனே அலுவலகத்திற்கு சென்று கதை பேசிவிட்டு திரும்ப செல்வது என இருந்து வருகிறார்கள் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இதனை ஆங்கிலத்தில் Coffee Badging என அழைக்கிறார்கள்.
அதே வேளையில் பல்வேறு நிறுவனங்களும் அலுவலகத்திற்கு வர விரும்பாத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக மற்றொரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2022 ஆம் ஆண்டில் அலுவலகத்திற்கு வர மறுத்த 11 சதவீதம் பேர் வேலை விட்டு நீக்கப்பட்ட நிலையில் 2023-ஆம் ஆண்டில் அது 23 சதவீதம் உயர்ந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications