வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகம் வந்து வேலை செய்ய முடியாது எனக் கூறும் ஊழியர்கள் வேலையை விட்டு நின்று விடலாம் என அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் ஜனவரி 2ஆம் தேதி முதல் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவித்துள்ளது. இதற்கு ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படும் மேட் கார்மென் வரும் ஜனவரி மாதம் முதல் ஊழியர்கள் கட்டாயம் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு வந்து மட்டுமே பணி புரிய வேண்டும் , ஒருவேளை அலுவலகத்திற்கு வர முடியாது என கூறுபவர்கள் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அனைவருடனும் இணைந்து அலுவலக சூழலில் பணிபுரிய முடியாது என கருதுபவர்களுக்கு வேறு நிறுவனங்கள் இருக்கின்றன அங்கு சென்று விடலாம் என மேட் கார்மென் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமேசான் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிவதை ஒரு எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ள மேட் கார்மென் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு சூழலில் பணி செய்யும் போது நம்முடைய செயல்திறன் இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
ரிமோட் நடைமுறையிலான வேலையில் புதுமைகளை கொண்டு வருவது, ஒரு குறிப்பிட்ட குழுவினர் ஒன்றாக இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் பல்வேறு சவால்களை நிறுவனம் சந்திக்கிறது என விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக தங்களுடைய நிறுவனம் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்தில் வேலை இரண்டு நாட்கள் வீட்டிலிருந்த வேலை என்ற ஹைபிரிட் வேலை முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால் அது நாங்கள் எதிர்பார்த்த விதத்தில் வேலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரியும் போதும், வீட்டில் இருந்து பணிபுரியும் போதும் செயல்திறன்களை மதிப்பாய்வு செய்ததாகவும் அலுவலகத்தில் பணிபுரியும் போது அவர்கள் சிறப்பாக செயல்படுவதையும் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அமேசான் தலைமை எடுத்துள்ள முடிவுக்கு ஊழியர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. அலுவலகத்தில் வந்து வேலை செய்தால் செயல் திறன் அதிகமாக இருக்கிறது என கூறுவதற்கு எந்த ஆதாரத்தையும் அமேசான் தலைமை வெளியிடவில்லை அலுவலகத்திற்கு வருவதற்கு நீண்ட நேரம் பயணம் செய்வது என்பன உள்ளிட்டவற்றால் தங்களுடைய நேரம் தான் விரயம் ஆகுமே தவிர செயல் திறன் நிச்சயமாக அதிகரிக்காது என கூறுகின்றனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications