மும்பை: அமேசான் நிறுவனம் மும்பையில் தன்னுடைய டேட்டா மையத்தை நிறுவுவது உறுதியாகியுள்ளது. இதற்காக அமேசான் நிறுவனம் மும்பையில் 38.18 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை லோதா என்ற ரியல் எஸ்டேட் குழுமத்திடமிருந்து வாங்கி இருக்கிறது.
மும்பையின் பல்லவா பகுதியில் இருக்கும் இந்த நிலத்தை அமேசான் நிறுவனம் 450 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி சுட்டிக்காட்டுகிறது. அமேசான் டேட்டா சர்வீசஸ் இந்தியா என்பது அமேசான் இந்தியா நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும்.

இந்த துணை நிறுவனத்தின் சார்பாக தான் தற்போது மும்பையில் 450 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் 4.16 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடத்தை நிறுவுவதற்கு அனுமதி இருக்கிறது. எனவே இங்கே அமேசான் நிறுவனம் தன்னுடைய டேட்டா மையத்தை நிறுவ இருப்பது உறுதியாகியுள்ளது.
முதல் கட்டமாக அமேசான் நிறுவனம் லோதா குழுமத்திடம் 396 கோடி வழங்கி விற்பனை ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டதாகவும் மற்ற நடைமுறைகள் முடிந்த பிறகு மீதமுள்ள 54 கோடி செலுத்தும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலத்தை வாங்குவதற்காக அமேசான் நிறுவனம் முத்திரைத்தாள் கட்டணமாக 27 கோடி ரூபாயை செலுத்தி இருக்கிறது. நவம்பர் 12ஆம் தேதி இந்த பத்திரப்பதிவு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே அமேசான் டேட்டா சர்வீசஸ் நிறுவனம் மும்பையில் கோவாய் என்ற பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை வாங்கியது. எல்&டி நிறுவனத்திடம் இருந்து இந்த நிலத்தை அமேசான் நிறுவனம் 18 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. இந்த பகுதியில் தற்போது அமேசான் நிறுவனம் தன்னுடைய டேட்டா மையங்களை நிறுவி வருகிறது. 18 ஆண்டு கால லீசுக்காக எல்&டி நிறுவனத்திற்கு அமேசான் நிறுவனம் 562 கோடி ரூபாய் செலுத்த இருக்கிறது.
இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மாற்றங்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் நிறுவுவதில் தங்கள் நிறுவனம் உறுதியாக இருக்கிறது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 12.7 மில்லியன் டாலர்கள் அளவுள்ள கிளவுட் உள்கட்டமைப்பை தங்கள் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக அமேசான் கூறியுள்ளது.
சர்வதேச அளவில் செயல்படக்கூடிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய கவனத்தை தற்போது இந்தியாவின் பக்கம் திருப்பி உள்ளன. இந்தியாவில் பெரும்பாலான சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால் டேட்டா மையங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களுடைய டேட்டா மையங்களை நிறுவுவதில் ஆர்வம் காட்டுகின்றன. அமேசானை தொடர்ந்து கூகுள். மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் டேட்டா மையங்களை நிறுவுவதற்கான பணிகளை தீவிர படுத்தியுள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications