இந்தியாவில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவைகள் வந்த பின்பு ரீடைல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் மத்திய அரசு ரீடைல் நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பாதிக்காத வண்ணம் ஈகாமர்ஸ் துறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு கொள்கை மாற்றத்தைச் செய்து வரும் நிலையில், தற்போது புதிய கொள்கை மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளது.
இப்புதிய கொள்கை மாற்றத்தின் மூலம் இனி அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பண்டிகை காலத்தில் நடத்தும் மாபெரும் தள்ளுபடி விற்பனை செய்ய முடியாது.
பிளாஷ் சேல்-க்குத் தடை
தற்போது நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோக அமைச்சகம் உருவாக்கியுள்ள புதிய கொள்கை மாற்றத்தின் மூலம் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இனி வரும் காலத்தில் பிளாஷ் சேல் செய்யத் தடை விதிக்கப்பட உள்ளது. தற்போது இந்தத் திட்டம் ஆலோசனை மற்றும் ஆய்வு கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் ஆதிக்கம்
பிளாஷ் சேல் என்பது அனைத்து பிரிவுகளிலும், அதிகப்படியான தள்ளுபடி உடன் பொருட்களை விற்பனை செய்யும் தள்ளுபடி விற்பனை தான். இத்தகைய விற்பனை மூலம் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிகப்படியான வருமானம் பெறுவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வாடிக்கையாளர்களையும் பெறுகிறது.
CAIT அமைப்பு
CAIT அமைப்பும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இத்தகைய தள்ளுபடி விற்பனை மூலம் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் அதிகளவிலான டிஸ்கவுன்ட் அளித்து ரீடைல் வர்த்தகர்களின் வியாபாரத்தைத் தின்றுவருகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளது.
ரீடைல் விற்பனையாளர்கள்
இதேவேளையில் பிளாஷ்சேல் மூலம் ரீடைல் விற்பனையாளர்களின் வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிக்கிறது. இது மட்டும் அல்லாமல் இத்தகைய தள்ளுபடி விற்பனை 10 முதல்15 நாட்கள் வரையில் இருக்கும் காரணத்தால் ரீடைல் வர்த்தகர்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என அரசிடம் புகார் அளித்துள்ளனர்.
2 வருடத்தில் பல கட்டுப்பாடுகள், விதிமுறைகள்
ஈகாமர்ஸ் துறையை அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், முறையற்ற வகையில் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றுவதைத் தடுக்கவும், ரீடைல் வர்த்தகர்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காகப் பல கட்டுப்பாடுகள் கடந்த 2 வருடத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications