சென்னை: இந்திய ஈகாமர்ஸ் துறையில் ஜாம்பவானாக இருக்கும் அமேசான் நிறுவனத்தில், இந்தியாவின் நுகர்வோர் வணிகத்தை கன்டரி மேனேஜராக சமீர் குமார் இனி வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தற்போதைய இந்திய தலைமை நிர்வாகியாக இருக்கும் மனிஷ் திவாரி, நிறுவனத்திலிருந்து வெளியேறி வேறு ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்துள்ளார். இந்தியாவில் தற்போது குவிக் காமர்ஸ் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஈகாமர்ஸ் உயர் அதிகாரிகளை இப்பிரிவு நிறுவனங்கள் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் மனிஷ் திவாரி பிரபலமான குவிக் காமர்ஸ் நிறுவனத்தில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

யார் இந்த சமீர் குமார்? 1999 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சமீர் குமார், 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமேசான் இந்தியாவின் துவக்கக் குழுவில் முக்கிய பங்கு வகித்தார். சமீர் குமார் மத்திய கிழக்கு, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நுகர்வோர் வணிகத்தை மேற்பார்வையிடும் பொறுப்புடன் கூடுதலாக, இந்தியாவிலும் இனி தலைமை நிர்வாகியாக பணியாற்றுவார்.
சமீர் குமார் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், தற்போதைய தலைமை நிர்வாகி மனிஷ் திவாரியுடன் இணைந்து நிர்வாக பொறுப்பு மாற்றத்தில் இருவரும் இணைந்து செயல்பட உள்ளனர்.
2016 ஆம் ஆண்டு யுனிலிவர் நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர், அமேசான் இந்தியாவில் துணைத் தலைவராகச் சேர்ந்தவர் மனிஷ் திவாரி. 2022 ஆம் ஆண்டு, அமேசான் நிறுவனத்தின் அமெரிக்கா அல்லாத சந்தைகளின் மூத்த துணைத் தலைவராக அமித் அகர்வால் உயர்த்தப்பட்ட பின்னர், இந்தியத் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமேசான் இந்தியாவில் பல்வேறு பிரிவுகளைக் கையாளும் சௌரவ் ஸ்ரீவஸ்தவா, ஹர்ஷ் கோயல், அமித் நந்தா ஆகியோரும், வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வை செய்யும் ஆஸ்தா ஜெயின்-ம் இனி சமீர் குமார் கீழ் பணியாற்றுவார்கள்.
ஈகாமர்ஸ் துறையில் உலகளாவிய அனுபவம் மிக்க சமீர் குமாரின் தலைமையில், இந்தியாவில் அமேசான் இன்னும் வேகமான வளர்ச்சியை அடைய அமேசான் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மேலும் தனது பலத்தை அதிகரிக்கவும், புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதேவேளையில் உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான், இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்யணம் செய்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்த 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அதிகமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும். இந்த நடவடிக்கை, உலகளாவிய சப்ளை சங்கிலியில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது மற்றும் சீனாவை விடுத்து பிற நாடுகளில் இருந்து பொருட்களை நுகர வேண்டும் என திட்டமிட்டும் அனைத்து விற்பனையாளர்களுக்கும் இந்தியா மாற்று இடமாக உருவெடுத்துள்ளது.
அதேபோல, வால்மார்ட் இன்க், 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து தனது சப்ளைக்களை வருடாந்திர அடிப்படையில் 10 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் சுமார் 3 பில்லியன் டாலர் அளவில் இருந்து பெரும் உயர்வாகும்.
இந்த இரண்டு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களும் இந்தியாவை ஒரு முக்கியமான சப்ளையர் ஆகக் கருதுவது, இந்தியாவின் உற்பத்தித் திறன் மற்றும் சந்தை வலிமையை காட்டுகிறது. இந்தியாவில் உள்ள ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள், சிறந்த தரம் மற்றும் சர்வதேச அளவில் போட்டித்தன்மை கொண்ட விலை பட்டியலில் உள்ளது.


Click it and Unblock the Notifications