அமேசான் இந்தியா தனது ஒரு மாத பண்டிகைக் கால விற்பனையின் போது இதுவரை இல்லாத அளவுக்கு 140 கோடி வாடிக்கையாளர் வருகைகளைக் கண்டுள்ளது. அவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மெட்ரோ அல்லாத நகரங்களிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஏறக்குறைய 70 சதவீத விற்பனையாளர்கள் டயர் 2 மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் அமேசான் நிறுவனமானது கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்த விற்பனையாளர்கள் மூலம் அதிக விற்பனையை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
அமேசான் பிளாட்பார்ம் நாடு முழுவதும் உள்ள ப்ரைம் உறுப்பினர்களுக்கு 3 கோடிக்கும் அதிகமான தயாரிப்புகளை "அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்" அன்றும், அதற்கு மறுநாளும் விற்பனை செய்துள்ளதாகக் கூறியுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகமாகும்.

"வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் போன்றவர்களுக்கு உதவ அதிகமான வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று அமேசான் இந்தியாவின் துணைத் தலைவரான சௌரப் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை விட, பண்டிகை கால விற்பனை 70 சதவீதம் அதிகரித்து, 1 கோடி ரூபாயை எட்டியுள்ளது. பெண் தொழில்முனைவோர், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் உட்பட சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பண்டிகைக் கால விற்பனையின் போது ஒவ்வொரு நிமிடமும் 1,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்ததாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4500-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் 10 மடங்கு அதிக விற்பனையையும் 7,000-திற்க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் 5 மடங்கு அதிக விற்பனையையும், மேலும் 13,000-த்திற்கும் அதிகமான விற்பனையாளர்கள் 2 மடங்கு அதிக விற்பனையையும் கண்டதாக அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஈஎம்ஐ மூலம் பெரிய எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளன. மொபைல்கள் முதல் பெரிய உபகரணங்கள் வரையிலான பொருட்களின் விற்பனையில் நான்கில் ஒரு பங்கு ஈஎம்ஐ திட்டங்களின் மூலம் செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பேரில் மூன்று பேர் நோ-காஸ்ட் ஈஎம்ஐ ஆப்ஷனைப் பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரூ.30,000 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையுள்ள பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவு அனைத்து விலை பிரிவுகளிலும் அதிகபட்ச விற்பனையைக் கண்டுள்ளது. சிறந்த சலுகைகள் மற்றும் EMI மூலம் பணம் செலுத்தும் விருப்பங்களே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் 70 சதவீத விற்பனை டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களை சேர்ந்தவர்களால் செய்யப்பட்டுள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி விற்பனை டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications