உலகின் மிகப்பெரிய டெக் சேவை மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான் 6 மாதத்தில் 27000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் கிட்டத்தட்ட 2000 அமேசான் ஊழியர்கள் தங்களது பணியை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை பிரிவான Amazon Web Services (AWS) வியாழன், இந்தியாவில் 2030-க்குள் கிளவுட் உள்கட்டமைப்பில் சுமார் 12.7 பில்லியன் டாலர் அதாவது 1.05 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Amazon Web Services (AWS) அறிவித்துள்ள இந்த மாபெரும் முதலீடு இந்தியாவில் புதிய டேட்டா சென்டர்களை உருவாக்க பயன்படும். தற்போது அமேசான் இந்தியாவில் வெறும் 2 டேட்டா சென்டர்களை மட்டுமே வைத்து இயங்கி வருகிறது, இதில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று ஹைதராபாத்திலும் உள்ளது.
சென்னையில் மிகப்பெரிய அலுவலகத்தை வைத்திருக்கும் அமேசான் புதிய டேட்டா சென்டரை சென்னையில் அமைக்குமா என்ற கேள்வி முக்கியமானதாக உள்ளது. இது மட்டும் நடந்து விட்டால் தமிழ்நாட்டு நிறுவனங்களின் டிஜிட்டல் சேவை கனவுகள் மெய்படும்.
மத்திய அரசின் digilocker, cowin செயலிகள் Amazon Web Services (AWS) தளத்தில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்க இந்தியாவில் முதலீடு செய்து வருகிறது, இதில் கூகுள்-ம் அடக்கம்.
AWS முதலீட்டு அறிவிப்பு ஏன் மிகவும் முக்கியம்..?: AWS முதலீட்டுத் திட்டம் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் கிளவுட் சேவை தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமானதாக விளங்குகிறது. தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், மாநில அரசுகள், மத்திய அரசு என அனைத்து தரப்பினரும் மக்களுக்கு தங்களது தேவைகளை நேரடியாக வழங்க டிஜிட்டல் தளத்தை தேர்வு செய்துள்ளது.
இதன் கிளவுட் சேவைக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இப்பிரிவில் கூகுள், மைக்ரோசாப்ட் என பலரும் போட்டிப்போட்டாலும் அமேசான் பெரும் சந்தையை இந்தியாவில் வைத்துள்ளது. அமேசான் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவில் வருமானம் பார்ப்பதை காட்டிலும் கிளவுட் சேவையில் அதிக லாபத்தை பார்த்து வருகிறது.
இதன் காரணமாக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா இருக்கும் வேளையில் அமேசான் சிறப்பான அதேநேரம் மலிவான கட்டணத்தில் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக கிளவுட் சேவையில் 1.05 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 131,700 முழுநேர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் நிறுவனத்தின் Amazon Web Services (AWS) முதலீடு 2030-க்குள் இந்தியப் பொருளாதாரத்திற்கு 23.3 பில்லியன் டாலர் அளவிலான பங்களிப்பை கொடுக்கும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இப்புதிய முதலீட்டு அறிவிப்பான 12.7 பில்லியன் டாலர் உடன் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை சேர்த்தால் 16.4 பில்லியன் டாலர் தொகையை 2030க்குள் முதலீடு செய்ய உள்ளது. அமேசான் இந்தியாவில் 2016 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications