உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஜெப் பைசோஸ் தற்போது 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான அமேசான் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து பணமாகப் பெற்றுள்ளார். அமேசான்.காம் சிஇஓ பதவியில் இருந்து விலகிய போதே ஜெப் பைசோஸ் பல புதிய துறைகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாகத் தற்போது அடுத்தடுத்து பங்குகளை விற்பனை செய்து வருகிறார் ஜெப் பைசோஸ்.
ஜெப் பைசோஸ் அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, சுமார் 2 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் பங்குகளை அடுத்தடுத்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஜெப் பைசோஸ் சுமார் 7,39,032 பங்குகளை விற்பனை செய்துள்ளார். அமேசான் நிறுவனத்தை உருவாக்கிய ஜெப் பைசோஸ்-யிடம் இந்நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளைத் தற்போது வைத்துள்ளார்.
இதன் மூலம் இவரது சொத்து மதிப்பு 192.1 பில்லியன் டாலர் உயர்ந்து உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆகவும் உள்ளார்.
மேலும் கொரோனா காலத்தில் மக்கள் அதிகளவில் பொருட்களை ஆன்லைன் டெலிவரி பெறும் நிலையில் அமேசான் நிறுவனம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருவது மட்டும் அல்லாமல் இந்நிறுவனப் பங்குகள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் அமேசான் பங்குகளின் மதிப்பு சுமார் 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஒரு அமேசான் பங்கின் மதிப்பு 3,291.61 டாலராகும். 2020 ஜனவரி மாதம் அமேசான் நிறுவன பங்குகளின் விலை 1,874.97 டாலர் மட்டுமே, லாக்டவுனில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications