உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் தளமான அமேசான் வெறும் மூன்றே மாதங்களில் சுமார் 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஆண்டி ஜாஸி ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்து ஒரு ஈமெயில் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
பொருளாதாரம் சரியில்லை!
கடந்த சில மாதங்களாகவே அமேசானில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏனெனில், கொரோனா காலத்தில் அளவுக்கு மீறி ஊழியர்களை பணியில் அமர்த்திவிட்டதாக அமேசான் நிறுவனமே ஒப்புக்கொண்டிருந்தது.
18,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அதனையடுத்து ஜனவரியில் ஒரே நாளில் 18,000 ஊழியர்களை அமேசான் நிறுவனம் கொத்தாக பணிநீக்கம் செய்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியது.
அமேசான் நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிப்பதால் மேனேஜர்கள் உட்பட சுமார் 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும், அடுத்த ஆண்டு வரை பணிநீக்கம் தொடரும் எனவும் முன்பே கூறியிருந்தது.
தற்போது அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி 27,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனவரியில் வெளியிட்டு அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
முன்று மாதங்களில் 27,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அமேசான் நிறுவனம் இதுவரை 27,000 பேரைப் பணி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக ஜனவரி மாதத்தில் 18,000 பேர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 9,000 பேர் நீக்கப்படுகின்றனர். இந்த அளவுக்கு ஊழியர்கள் நீக்கப்படுவது அமேசான் நிறுவன வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.
CEO அனுப்பிய ஈ-மெயில்!
இந்த மிகப்பெரிய பணி நீக்கத்தைத் தொடர்ந்து அமேசான் ஊழியர்களுக்கு அமேசான் CEO ஆண்டி ஜாஸி ஈ-மெயில் மூலம் அவரின் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் நிறுவனத்தின் நீண்ட கால நன்மைக்காகவே இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவும், தற்போதைய நிச்சயமற்ற பொருளாதார சூழலில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், செலவுகளைக் குறைக்கவும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும் இதனால் சில பணிகள் நீக்கப்பட்டுள்ளன. சில பணிகளுக்கான முன்னுரிமை குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 9000 பேரை பணிநீக்கம் செய்யும் கட்டாயத்தில் நிறுவனம் இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால் உங்களின் பணிநீக்கத்திற்கு நிறுவனம் வருந்துவதாகவும், ஊழியர்களை அமேசான் கண்டிப்பாக மிஸ் செய்யும் எனவும் கூறியுள்ளார்.
முன்பே எச்சரித்த ஆண்டி ஜாஸி!
இந்த மெகா பணிநீக்கங்கள் குறித்து சிஇஓவான ஆண்டி ஜாஸி சென்ற ஆண்டே அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி பொருளாதார மந்தநிலை தொடரும் அச்சத்தால் பெரிய அளவிலான பணிநீக்க அறிவிப்புகளை ஊழியர்கள் எதிர்கொள்வார்கள் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகப்பெரிய மின்னணு வர்த்தக நிறுவனமாக அமேசான் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் உலகளவில் சுமார் 3.5 லட்சம் கார்ப்பரேட் ஊழியர்கள் இருக்கின்றனர். இதுபோக மற்ற வேலைகளிலும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications