இந்தியாவில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை அனைத்து வகையிலும், அனைத்து துறையிலும் மேம்படுத்த வேண்டும் அதேவேளையில் போக்குவரத்து செலவுகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்து திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் அமெரிக்க ஈகாமர்ஸ் தளமான அமேசான் நிறுவனத்தின் Amazon Seller Services மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் Inland Waterways Authority of India (IWAI) புதன்கிழமையன்று கங்கை நதியில் சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பாட்னா-கொல்கத்தா நீர் வழித்தடத்தில் ஒரு சோதனை திட்டமாக இது தொடங்கப்பட உள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ், அமேசான் இந்தியா, IWAI உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமேசான் இந்தியா நிறுவனம் பாட்னா-கொல்கத்தா மத்தியில் இருக்கும் ஆறுகள், கால்வாய்கள், உப்பங்கழிகள் மற்றும் சிற்றோடைகளை அடக்கிய 14,500 கிமீ நீளமுள்ள உள்நாட்டு நீர்வழிகளில் தனது விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்துகிறது.
அமேசான் ஏற்கனவே ஜனவரி மாதம் அமேசான் ஏர் என்னும் விமான சரக்கு போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் சரக்கு நெட்வொர்க்கை விரிவுப்படுத்த துவங்கி தற்போது நீர்வழிகளை மேம்படுத்த உள்ளது. இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும்.
உலக வங்கி அறிக்கையின்படி, நீர் போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது ரயில் மற்றும் சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அளவிலான எரிபொருளை பயன்படுத்துகிறது. சாலை போக்குவரத்தை ஒப்பிடும் போது 91.6 சதவீதம் குறைவான எரிபொருள் மட்டுமே நீர்வழியில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் நீர் போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தை தொடங்கியுள்ளது, இதில் ரூ.7,030 கோடி மதிப்பீட்டில் 113 திட்டங்கள் உள்ளன. இவற்றில், மொத்தம் ₹1,100 கோடியில் 15 திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ₹3,900 கோடி மதிப்பிலான 32 திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
2030 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டு நீர் போக்குவரத்தை 200 MMT (மில்லியன் மெட்ரிக் டன்கள்) க்கும் அதிகமாக அதிகரிப்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு இந்த சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications