சர்வதேச அளவில் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் சமீபத்தில் சுமார் 10,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இது அமேசான் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது எனலாம்.
ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் கிளவுட் யூனிட்டிற்கு புதிய ஊழியர்களை, பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.

வெப் சேவையில் அதிக பணியமர்த்தல்
இது குறித்து அமேசான் வெப் சேவை துறையின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவின் மூத்த துணைத் தலைவரான, மாட் கார்மன், நிறுவனம் அமேசான் வெப் சேவை சம்பந்தமான துறையில் நிறுவனம் அதிக பணியாளர்களை பணியமர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

பணியமர்த்தலை நிறுத்தவில்லை
நடப்பு ஆண்டில் பணியமர்த்தல் செய்தாலும், அடுத்த ஆண்டில் அதிகளவில் பணியமர்த்தல் செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் செலவுகளை குறைக்க பணி நீக்க நடவடிக்கையினை எடுத்தது. எனினும் அதற்காக முழுமையாக பணியமர்த்தலை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ளது.

ஏன் பணியமர்த்தல்
ஏனெனில் நிறுவனத்டின் கிளவுட் யூனிட் என்பது மிகவும் லாபகரமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது வளர்ச்சி வேகமாக இருந்து வருவதாகவும் கார்மன் தெரிவித்துள்ளார். ஆக இந்த பிரிவில் அமேசான் தொடர்ந்து முதலீட்டினை அதிகரித்து வரும் என தெரிவித்துள்ளது. ஆக மற்ற துறைகளில் பணி நீக்கம் என்பது இருந்தாலும், வெப் சேவையில் பணியமர்த்தல் தொடர்ந்து கொண்டுள்ளது.

பணியமர்த்தல் எப்போது?
எப்படியிருப்பினும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பணியமர்த்தல் என்பது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எங்களது வணிகம் தற்போதும் வளர்ச்சி கண்டு கொண்டுள்ளது. எனினும் நிலவி வரும் மந்த நிலைக்கு ஏற்ப நிறுவனம் தயாராகி கொண்டுள்ளது. தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. என்னதான் நிறுவனம் வளர்ச்சி காண்பதாக கூறியிருந்தாலும், மந்த நிலையால் வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளவுட் தான் பெஸ்ட்
எப்படியிருப்பினும் நிறுவனம் தொடர்ந்து தனது வணிகத்தினை எதிர்கால வளர்ச்சி கருதி, வளர்ச்சி காண கிளவுட் பகுதியில் கவனம் செலுத்தி வருகின்றது. அமேசானின் கிளவுட் யூனிட் மூன்றாம் காலாண்டில் மொத்தம் 20.5 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு விற்பனையை செய்துள்ளது. எனினும் இந்த துறையிலும் வளர்ச்சி என்பது மெதுவாக உள்ளதாகவே நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆறுதல் தரும் விஷயம்
ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்த ஒரு நிறுவனம், தற்போது பணியமர்த்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது எனலாம். அதோடு பணி நீக்கமே இருந்தாலும் படிப்படியாக இருக்கும் என்பதும், பல ஊழியர்களுக்கு டிசம்பர் 30 கடைசி தேதியாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.