அமேசான் நிறுவனம் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக துணிகளை விற்பனை செய்து வரும் துணை நிறுவனமான,பேப்ரிக்.காம் சேவையினை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சில்லறை வணிக நிறுவனமான அமேசான் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இதனை எடுக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும் Fabric.com அதன் தளத்தில் இனி துணிகளை விற்பனை செய்யாது என்றும், அதற்கு பதிலாக அமேசானில் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. கடைசியாக கடந்த வியாழக்கிழமை வரையில் ஆர்டர் செய்து கொள்ளலாம் என அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தது. ..
ஆராய்ந்து முடிவு
ஆக இனி பேப்ரிக்.காமில் துணிகளை வாங்குவதற்கு பதிலாக அமேசானில் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். தொடர்ந்து எங்களது வணிக நடவடிக்கைகளை தீவிரமாக ஆராய்ந்து, சர்வதேச அளவிலான மந்த நிலை காரணிகளுக்கு மத்தியில் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், அமேசானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு பாதிப்பு
அமேசானின் இந்த முடிவினால் பலருக்கும் வேலை இழப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனால் எத்தனை பேருக்கு வேலையிழப்பு இருக்கும். இதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என தெளிவாகத் தெரியவில்லை. அருகிலுள்ள கிடங்குகள் உட்பட பிற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேப்ரிக்.காம் வரலாறு
ஜார்ஜியாவை அடிப்படையாக கொண்ட பேப்ரிக்.காம் 1993ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒன்றாகும். இது முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும், மொத்த விற்பனையாளராகவும் இருந்து வந்தது.
இதனை அமேசான் நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டில் தான் கையகப்படுத்தியது. இது அமேசானின் பேப்ரிக் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய உதவிகரமாகவும் இருந்தது.
செலவு குறைப்பு நடவடிக்கை
அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் தரமான தையல் துணிகளை விற்பனை செய்யும் என்றும் கூறியிருந்தது. தற்போது உலகம் முழுக்க மந்த நிலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வலைதள நிறுவனம் செலவுகளை குறைக்க, இத்தகைய நட்வடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
செலவு குறைப்பில் நிறுவனங்கள்
அமேசான் மட்டும் அல்ல, இன்னும் ஏராளமான நிறுவனங்களில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பணியமர்த்தல் குறைப்பு, கூடுதல் அலுவலகங்கள் மூடல், கட்டமைப்பு பணிகள் இடை நிறுத்தம் என பல்வேறு செயல்களை செயல்படுத்தி வருகின்றன. அமேசான் நிறுவனமே சில மாதங்களுக்கு முன்பாக தனது நிறுவனத்தின் அலுவலக உள்கட்டமைப்பு பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications